அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு

ஈரோடு, ஜன. 18: அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகைப்பதிவேடு பயோமெட்ரிக் முறைக்கு மாற்றப்பட்டுள்ளதையடுத்து பள்ளிகளில் அமல்படுத்திய விவரங்களை புகைப்படத்துடன் அனுப்பி வைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களுக்கு ஆதார் எண்ணுடன் இணைந்த பயோ மெட்ரிக் வருகைப்பதிவேடு அமல்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக, பயோமெட்ரிக் கருவிகள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு கடந்த வாரம் அந்தந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் மூலமாக தலைமையாசிரியர்களிடம் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. இன்று 18ம் தேதி முதல் பள்ளிகளில் இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்,`அரசு, நிதி உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள், அனைத்து வட்டார கல்வி அலுவலகங்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர் அலுவலகங்களில் பயோமெட்ரிக் முறை நடைமுறைப்படுத்தியதை உறுதி செய்யும் வகையில் புகைப்படத்துடன் கூடிய விபரங்களை மாவட்ட கல்வி அலுவலர்கள் பெற்று தொகுப்பறிக்கையினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறுகையில்,`ஈரோடு மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான பயோமெட்ரிக் வருகை பதிவேடு திட்டத்தை அமல்படுத்த வசதியாக 456 பயோமெட்ரிக் கருவிகள் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களிடம் கடந்த வாரம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.

தொடர்ச்சியாக, பொங்கல் விடுமுறை வந்ததையடுத்து பயோமெட்ரிக் கருவிகள் பொருத்துவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இன்று (18ம் தேதி) அந்தந்த பள்ளிகளில் பயோமெட்ரிக் கருவிகள் பொருத்த வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 21ம் தேதி முதல் ஆசிரியர்களின் வருகை பதிவேடு பயோமெட்ரிக் மூலமாக மட்டுமே பதிவு செய்யப்படும்’ என்றார்.
Advertising
Advertising

Related Stories: