தஞ்சை மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் முகாம் 24ம் தேதி துவக்கம்

தஞ்சை, ஜன. 18: தஞ்சை மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கான கடன் வழங்கும் முகாம் வரும் 24ம் தேதி முதல் துவங்கி நடக்கிறது. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களான பொதுக்கால கடன் திட்டம், தனிநபர் கடன் திட்டம், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டம், கல்வி கடன் திட்டம், கறவை மாடு கடனுதவி, ஆட்டோ கடன் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கும் முகாம்கள் நடக்கிறது. அதன்படி வரும் 24ம் தேதி திருவையாறு தாசில்தார் அலுவலகம், 31ம் தேதி பூதலூர் தாசில்தார் அலுவலகம், பிப்ரவரி 7ம் தேதி ஒரத்தநாடு தாசில்தார் அலுவலகம், பிப்ரவரி 14ம் தேதி பட்டுக்கோட்டை தாசில்தார் அலுவலகம், பிப்ரவரி 21ம் தேதி பேராவூரணி தாசில்தார் அலுவலகம், பிப்ரவரி 28ம் தேதி பாபநாசம் தாசில்தார் அலுவலகம், மார்ச் 7ம் தேதி கும்பகோணம் தாசில்தார் அலுவலகம், மார்ச் 14ம் தேதி திருவிடைமருதூர் தாசில்தார் அலுவலகம், மார்ச் 21ம் தேதி தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்திலும் கடன் வழங்கும் முகாம் நடக்கிறது.

Advertising
Advertising

முகாமில் பங்கேற்று பயன்பெற விரும்பும் சிறுபான்மையினர் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், கிராமப்புறங்களில் வசிப்பவராகவும் இருந்தால் ஆண்டுக்கு வருமானம் ரூ.81 ஆயிரத்துக்குள்ளும், நகர்ப்புறங்களில் வசிப்பவராக இருந்தால் ஆண்டு வருமானம் ரூ.1.03 லட்சத்துக்குள்ளும் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். சுயஉதவி குழுக்களுக்கான கடன் பெறும் திட்டத்தின்கீழ் பயன்பெற குழு துவங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Related Stories: