விளாச்சேரி மொட்டமலையில் டாஸ்மாக்கை அகற்றக்ேகாரி பெண்கள் முற்றுகை

திருப்பரங்குன்றம், ஜன.18: திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் கடை முன் அமர்ந்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பரங்குன்றம் அருகில் உள்ளது விளாச்சேரி. இங்குள்ள மொட்டமலை பகுதியில் குடியிருப்பு பகுதியின் நடுவே டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடையை சுற்றிலும் சுமார் 1500க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. மேலும் இந்த கடையின் அருகே, குடிநீர் குழாயும், அங்கன்வாடி மையமும் அருகில் தனியார் பள்ளியும் செயல்படுகிறது. இப்பகுதியைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி பயிலும் மாணவிகள் இந்த கடை வழியாக தான் பேருந்து நிறுத்ததிற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் வேலைக்கு செல்லும் பெண்களும் இந்த கடையை கடந்து தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் இப்பகுதி பெண்கள் குடிமகன்களால் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். சில நேரங்களில் குடிமகன்கள் அரைகுறை ஆடைகளுடன் சாலையில் விழுந்து கிடப்பதும், குடிபோதையில் தகராறு செய்வது போன்ற சம்பவங்களால் இப்பகுதி குடியிருப்புவாசிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இந்த டாஸ்மாக் காடையை அகற்றகோரி பலமுறை புகார் தெரிவித்தும் டாஸ்மாக் நிர்வாகம் எந்த நடவடிக்கையையும் எடுக்காததால், நேற்று காலை டாஸ்மாக் முன்பு கூடிய இப்பகுதி பெண்கள் மற்றும் குழந்தைகள் கடையை திறக்கவிடாமல் கடை முன் அமர்ந்து முற்றுகையில் ஈடுபட்டு கடையை நிரந்தரமாக அகற்றகோரி கோஷங்களை எழுப்பினர்.

ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் அதிகாரிகள் வராததால் ஆத்திரமடைந்த பெண்கள் கடை முன் போடப்பட்டிருந்த கூரையை அகற்றினர். அதன் பின்னரும் அதிகாரிகள் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மதுரைதிருமங்கலம் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் இப்பகுதியில் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக பரபரப்பு நிலவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருநகர் இன்ஸ்பெக்டர் முத்துபாண்டி நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories: