ஆசிரியர்களுக்கு “பயோ மெட்ரிக்” பதிவு ஜன.21 முதல் மாவட்டத்தின் 113 பள்ளிகளில் அமலாகிறது

மதுரை, ஜன. 18:  மதுரை மாவட்டத்தில் ஜன.21ம் தேதி முதல் ஆசிரியர்களுக்கு “பயோ மெட்ரிக்” (வருகை) பதிவு துவங்குகிறது. இதற்கான டிவைஸ்கள் (கருவிகள்) பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு விட்டன.  அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் “பயோ மெட்ரிக்” பதிவு அமல்படுத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் ஜன.21ம் தேதி முதல் 113 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் பதிவு துவங்குகிறது. இதற்காக முதற்கட்டமாக ஒவ்வொரு பள்ளிக்கும் குறைந்தது 2 பயோ மெட்ரிக் (வருகை) பதிவு கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் மொத்தம் 261 பயோ மெட்ரிக் பதிவு கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.இவைகள் தவிர மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம், மதுரை, திருமங்கலம், மேலூர், உசிலம்பட்டி ஆகிய 4 கல்வி மாவட்ட அலுவலகங்கள், 15 வட்டார கல்வி அலுவலகங்கள், 15 வட்டார வள மையங்கள் ஆகியவற்றில் பயோ மெட்ரிக் கருவிகள் பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக ஆசிரியர்கள், அலுவலர்களின் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு 8 டிஜிட் கோடு எண் ஒதுக்கப்பட்டு வருகிறது. இக்கருவியில் ஆசிரியர்கள், அலுவலர்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்யும்போது கோடு எண்கள் மட்டுமே ஸ்கிரீனில் தெரியும்.

 இது குறித்து ஆசிரியர் ஒருவரிடம் கேட்டபோது, “மாநகராட்சி பள்ளிகளை தவிர்த்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு பயோ மெட்ரிக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இக்கருவிகள் ஆன்லைனில் இயங்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஜன.21ம் தேதி முதல் பயோ மெட்ரிக் முறையை துவங்க வேண்டுமென்ற கல்வித்துறையின் இந்த உத்தரவு வரவேற்கத்தக்கது. பள்ளிகளில் காலை 8.45 மணி முதல் 9.15 மணிக்குள்ளும், பகல் 1 மணி முதல் 1.15 மணிக்குள்ளும் ஆசிரியர்கள் வருகை பதிவு செய்ய வேண்டும். ஆனால், அதேநேரத்தில் பயோ மெட்ரிக் கருவிகள் இயங்க கணினி வசதி வேண்டும். இன்று, நிறைய உயர்நிலைப்பள்ளிகளில் கணினி இல்லை. மேலும் பல பள்ளிகளில் இன்டர்நெட் வசதி சரிவர கிடைப்பதில்லை. எனவே அனைத்து பள்ளிகளிலும் கணினி மற்றும் இன்டர்நெட் வசதியை முழுமையாக ஏற்படுத்திவிட்டு, பயோ மெட்ரிக் முறையை அமல்படுத்துவது பலன் தரும். இது தொடர்பான கருத்தை தலைமையாசிரியர்கள், அரசுக்கு தெரியப்படுத்தி உள்ளனர்” என்றார்.

Related Stories: