சாமி கும்பிடுவது போல் நடித்து அம்மன் கழுத்தில் தாலி செயினை பறித்து தப்பிய ஆசாமிக்கு தர்மஅடி: பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்

பல்லாவரம், ஜன.18: பல்லாவரம் அருகே கோயிலில் சாமி கும்பிடுவது போல் நடித்து அம்மன் கழுத்தில் கிடந்த தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பியோடிய நபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்து  போலீசில் ஒப்படைத்தனர்.

பல்லாவரம் பேருந்து நிலையம் அடுத்து, கன்டோன்மென்ட் கார் பார்க்கிங் வளாகத்தில் கோயில் உள்ளது. இங்கு, நேற்று பூஜைக்கான ஆயத்த வேலைகளில் பணியாளர்கள் ஈடுபட்டு  கொண்டிருந்தனர். அப்போது, டிப்டாப் உடை  அணிந்து வந்த இளைஞர் ஒருவர், சாமி கும்பிடுவது போல் நடித்து, அம்மன் கழுத்தில் கிடந்த தாலி செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் ஓடினார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கோயில் பணியாளர்கள் திருடன் திருடன் என கூச்சலிட்டனர். அலறல் சத்தம் கேட்டு திரண்டு வந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக விரட்டிச் சென்று தப்பியோடிய கொள்ளையனை மடக்கிப்  பிடித்தனர். மேலும் அவருக்கு தர்ம அடி கொடுத்து பல்லாவரம் போலீசில் ஒப்படைத்தனர்.போலீசார் அந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது, அவர் தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கம், ஆஸ்டல் தெருவை  சேர்ந்த கண்ணன் (34) என்பதும், குடும்பம் நடத்த போதிய வருமானம் கிடைக்காததால், திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். அம்மன் கழுத்தில் கிடந்த சுமார் ஐந்து சவரன் தாலி செயினையும் மீட்டனர். பிறகு அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவுப்படி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: