மாவட்டத்தில் இதுவரை 7 லட்சம் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

சேலம், ஜன.11:  சேலம் மாவட்டத்தில் இதுவரை 7 லட்சம் பேருக்கு தலா ₹1000 பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் 2.02 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு, தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, உலர் திராட்சை, 5கிராம் ஏலக்காய், 2 துண்டு கரும்பு மற்றும் ₹1000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. கடந்த 7ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ₹1000 வழங்கப்படுகிறது. இதனிடையே, வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு ₹1000 வழங்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்களாக, சர்க்கரை கார்டு(என்பிஎச்எச்(எஸ்)) மற்றும் எந்த பொருளும் வாங்காத கார்டுகளுக்கு (என்பிஎச்எச்(என்சி)) பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படமாட்டாது என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertising
Advertising

சேலம் மாவட்டத்தில், 1,570 ரேஷன் கடைகளில், 9,98,484 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, நேற்று முன்தினம் விடிய, விடிய ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டது. இதுவரை மாவட்டத்தில் 7 லட்சம் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. மீதியுள்ள 2.80 லட்சம் கார்டுகளுக்கு மட்டும் பொங்கல் பரிசு வழங்க வேண்டியுள்ளது. நேற்று முதல் சர்க்கரை கார்டுகள், எந்த பொருளும் வாங்காத கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதை நிறுத்த உத்தரவு வந்ததை தொடர்ந்து, ரேஷன் கடைகளில் அந்த கார்டுகளுக்கு பொங்கல் பரிசு ₹1000 வழங்குவது நிறுத்தப்பட்டது. இதனால் நேற்று காலை ரேஷன் கடைகளுக்கு வந்த இந்த கார்டுதாரர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

 இதுகுறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘சேலம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் 72 சதவீதம் அளவிற்கு பொங்கல் பரிசு தொகுப்பு, ₹1000 வழங்கப்பட்டு விட்டது. இனிமேல், சர்க்கரை கார்டுகளுக்கும், எந்த பொருளும் வாங்காத கார்டுகளுக்கும் ₹1000 வழங்கப்பட மாட்டாது. ஆனால், இவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது’’, என்றனர்.

  இதை தொடர்ந்து, சேலம் மாநகர், மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்ல் பரிசு தொகுப்பை பெறுவதற்கு பிற்பகலில் பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக ரேஷன் கடைகளில் குவிந்தனர். இதுகுறித்து ரேஷன் கடை விற்பனையாளர்கள் கூறுகையில், ‘அரசு உத்தரவின்படி, அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கும் மட்டும் வழங்க வேண்டும் என்ற உத்தரவு இதுவரை வரவில்லை. நாளை(இன்று) ஏதாவது உத்தரவு வந்தால் தான் தெரியும்,’ என்றனர்.

Related Stories: