திருச்சியில் மகளிர் குழு உற்பத்தி பொருட்கள் கண்காட்சி

திருச்சி, ஜன.11: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் திருச்சி மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சி திறப்பு விழா ஹோலிகிராஸ் கல்லூரியில் நேற்று நடந்தது. திருச்சி கலெக்டர் ராஜாமணி கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், ‘பெண்களின் சமூக பொருளாதார மற்றும் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் 20 ஆயிரம் குழுக்களில் 3.55 லட்சம் மகளிர் உறுப்பினர்களாக உள்ளனர். மகளிரின் வாழ்வாதாரத்தை பெருக்கவே இதுபோன்ற விற்பனை கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன’ என்றார்.

மகளிர் திட்ட அலுவலர் சரவணன், உதவி மகளிர் திட்ட அலுவலர் ஜான், ஹோலி கிராஸ் மகளிர் கல்லூரி முதல்வர் கிறிஸ்டினா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: