பொங்கல் பரிசு வழங்காததை கண்டித்து கட்டுமாவடியில் மக்கள் சாலை மறியல்

மணமேல்குடி, ஜன.11: கட்டுமாவடி  ஊராட்சியில் பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் மற்றும் ரேஷன் பொருட்கள்  சரியாக வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கட்டுமாவடியில்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு  குடும்பத்திற்கும் தலா ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்புகள்  வழங்கப்பட்டு வந்தது.  பாதி பேருக்கு வழங்கியும், பாதி பேருக்கு வழங்காமலும்  இருந்துள்ளனர். மேலும் அரசு அறிவித்துள்ள 25 கிலோ அரிசிக்கு பதிலாக 20  கிலோவும் மற்றும் சில ரேஷன் பொருட்கள் அரசு அறிவித்துள்ளதை விட குறைவாகவும்  வழங்கப்பட்டதால் பொதுமக்கள் கோபம் அடைந்தனர். ந்நிலையில் திடீரென பொங்கல்  பரிசு வழங்குவது நிறுத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில்  ஈடுபட்டனர். கட்டுமாவடி ஊராட்சியை சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில்  ஈடுபட்டனர்.

இதனால் பட்டுக்கோட்டை, ராமேஸ்வரம், அறந்தாங்கி மார்க்கமாக  செல்லும் அனைத்து பஸ்களும் தடைபட்டது. மணமேல்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுடன்  பேச்சுவார்த்தை நடத்தி பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படும் என  உறுதி அளித்ததை தொடர்ந்து மக்கள் மறியலை கைவிட்டனர்.

Related Stories: