பவானிசாகர் அருகே சின்னபண்ணாரி அம்மன் கோயில் 44ம் ஆண்டு திருவிழா

சத்தியமங்கலம், ஜன.11: பவானிசாகர் அருகே பெரியார் நகரில் உள்ள சின்ன பண்ணாரி அம்மன் கோயில் 44ம் ஆண்டு விழா நேற்று நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் மதியம் பண்ணாரி அம்மன் கோயிலில் இருந்து தேர் புறப்பட்டு சின்னபண்ணாரி அம்மன் கோயிலை வந்தடைந்தது. நேற்று காலை 7 மணிக்கு பவானிசாகர் அணை அருகே உள்ள புங்கார் பவானி ஆற்றங்கரையிலிருந்து அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் காவடி எடுத்து பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், அக்னிகுடம், தீர்த்தகுடம், கரகம் எடுத்தபடியும், அலகு குத்தி தேர் இழுத்தும் அம்மனை வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். மதியம் 12 மணியளவில் ஊர்வலமாக அம்மன் கோயிலை வந்தடைந்ததையடுத்து அம்மனுக்கு அபிஷேக அலங்கார உச்சிகால பூஜை நடந்தது. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertising
Advertising

மாரியம்மன் கோவில் குண்டம் விழா: ஈரோடு வெட்டுகாட்டு வலசு சைவ மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் பொங்கல் விழா மற்றும் குண்டம் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இதேபோல் இந்த ஆண்டு பொங்கல், குண்டம் திருவிழா கடந்த 1ம் தேதி பூச்சாட்டு மற்றும் கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதனையடுத்து பூவோடு வைத்தல், அக்னிகபால ஊர்வலம், தீர்த்த ஊர்வலம் நடந்தது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று காலை குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் கோவில் பூசாரி பூங்கரகத்துடன் குண்டம் இறங்கினார். இதனைத்தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குண்டம் இறங்கி, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

 இவ்விழாவையொட்டி சைவ மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.

Related Stories: