திருமணத்திற்கு தடையாக இருந்த தந்தையை வெட்டிக்கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை

திருச்சி, ஜன.10:  மருங்காபுரியில் திருமணத்திற்கு தடையாக இருந்த தந்தையை வெட்டிக்கொன்ற வழக்கில் மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் இக்கரை கோசுகுறிச்சியை சேர்ந்தவர் வெள்ளைசாமி. இவருக்கு 3 மகன்கள், மகள்கள் உள்ளனர். இதில் மகன் சாமி கண்ணு (எ) அன்புசாமி (33) என்பவருக்கு திருமணத்திற்காக பெண் பார்த்து வந்தனர். ஆனாலும் பொருத்தமான மணமகள் கிடைக்கவில்லை. இதற்கு தந்தை வெள்ளைசாமி தடையாக இருப்பதாக மகன் சாமிகண்ணு நினைத்து தந்தை மீது கோபத்தில் இருந்தார். இந்நிலையில் தனது திருமணத்திற்கு தந்தை தடையாக இருப்பதை அறிந்த சாமிகண்ணு, 2013ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி தூங்கி கொண்டிருந்தவரை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த துவரங்குறிச்சி போலீசார் சாமிகண்ணுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்த வழக்கு திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்  நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றவாளிசாமி கண்ணுவிற்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராத தொகையை கட்டத் தவறினால் கூடுதலாக 3 வருடம் சிறை தண்டனை விதித்து நீதிபதி குமரகுரு தீர்ப்பளித்தார். தீர்ப்பை அடுத்து சாமிகண்ணு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அரசு தரப்பில் வக்கீல் சம்பத் குமார் ஆஜரானார்.

Related Stories: