கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு டாஸ்மாக் கடையை மூடக்கோரி 2 இடங்களில் மக்கள் ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி, டிச.25: கும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் ஒரு கடை தற்காலிகமாக மூடப்பட்டது.  கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் வீராசாமி நகர் பகுதியில் எளாவூர்-சுண்ணாம்புகுளம் சாலையில்  டாஸ்மாக் கடை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு செயல்பட்டது. பொதுமக்களின் போராட்டத்தால் அந்த கடை அப்போது மூடப்பட்டது. தொடர்ந்து, கடையை திறப்பதும், பொதுமக்கள் போராடினால் மூடப்படுவதுமாக இருந்து வந்தது.  

இந்த டாஸ்மாக் கடை உள்ள சாலை வழியாகத்தான் எளாவூர்,  மெதிப்பாளையம், பெரிய ஓபுளாபுரம், துராப்பள்ளம் போன்ற பகுதிகளை சேர்ந்த  பள்ளி மாணவர்கள், எளாவூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தினமும் நடந்து செல்ல  வேண்டும். அப்படி செல்லும் மாணவர்கள் மதுக்கடையை தாண்டிச் செல்ல  வேண்டிய அவல நிலை தொடர்ந்து இருந்தது. மேற்கண்ட  டாஸ்மாக் கடையில் இருந்து குடித்து விட்டு வரும் குடிமகன்களால் பெண்கள், பொதுமக்கள் அச்சத்துடனேயே சென்று வந்தனர்.   இந்நிலையில், தற்போது கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் அதே இடத்தில் 5வது முறையாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதை அறிந்த அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

தகவல் அறிந்ததும் ஆரம்பாக்கம்  சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட டாஸ்மாக்  குடோன் மேலாளர்  அருண்குமார் ஆகியோர் விரைந்து வந்து மாதர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஒரு மாத கால அவகாசம் கேட்டனர். அதனை ஏற்று, சமாதானமடைந்த மாதர் சங்கத்தினர், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.  மற்றொரு கடை: கும்மிடிப்பூண்டி அடுத்த கெட்டனமல்லி  ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2 முறை டாஸ்மாக் கடையை திறக்கப்பட்டது. பொதுமக்கள் எதிர்ப்பால் அப்போது மூடப்பட்டது.

தற்போது அதே இடத்தில் மீண்டும் நேற்று டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனை அறிந்த 100க்கும் மேற்பட்ட  பெண்கள், கிராம பொதுமக்கள் நேற்று டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு திடீர் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  

தகவல் அறிந்த கவரப்பேட்டை போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஆறாவது மைலில் இருந்து  சிறுபுழல்பேட்டை  செல்லும் சாலை வழியாகத்தான் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், வியாபாரிகள் தினந்தோறும் இரவு பகலாக இருசக்கர வாகனத்தில்  வந்து செல்கின்றனர்.

இந்த சாலை வழியே  எக்ஸ்போர்ட் தொழிற்சாலைக்கு செல்லும் பெண்கள் வந்து  செல்வதால் பாதுகாப்பில்லை என்றனர். இதை ஏற்று, கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி. சந்தரதாசன், மாவட்ட டாஸ்மாக் குடோன் மேலாளர் அருண்குமார் ஆகியோர் டாஸ்மாக் கடையை தற்காலிகமாக மூடினர்.  அதன்பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: