அடகு வைத்த நகைகளை திருப்பி கேட்டதால் கொலைமிரட்டல் கணவர் நம்பிக்கை மோசடி செய்துவிட்டதாக பெண் புகார்

நாகர்கோவில், டிச.20:  அடகு வைத்த நகைகளை திருப்பி கேட்டதால் கணவன் குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுப்பதாக இளம் பெண் அளித்த புகாரின் பேரில் கணவர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில், ராமன்புதூர், செயின்ட் மேரி தெருவை சேர்ந்தவர் ஹேதரின் (25). இவருக்கும் அழகியபாண்டியபுரம். எட்டாமடை பகுதியை சேர்ந்த இம்மானுவேல் (32) என்பவருக்கும் களியக்காவிளை அருகே உள்ள மரியகிரி கத்தோலிக்க தேவாலயத்தில் கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது 32 பவுன் தங்க நகை, ₹2 லட்சம் ரொக்கம் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வரதட்சணையாக வழங்கியுள்ளனர். திருமணம் முடிந்த 7வது நாள் ஹேதரினின் நகைகளை கணவரின் குடும்பத்தினர் வாங்கி அடகு வைத்துவிட்டதாக கூறப்படுகிறது.

கணவரும் வெளிநாடு சென்றுவிட்டதாக தெரிகிறது. அடகு வைத்த நகைகளை ஹேதரின் திரும்ப கேட்டபோது கணவர் குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அடித்து துன்புறுத்தியதாகவும், அதனால் தனது பெற்றோர் வீட்டிற்கு பாதுகாப்பு கருதி சென்றுவிட்டதாகவும் ஹேதரின் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.தனது செலவுக்கு பணம் கொடுக்காமலும், சேர்ந்து வாழாமலும், நகை, பணம், வீட்டு உபயோக பொருட்களை திருப்பி கொடுக்காமலும் கணவர் நம்பிக்கை மோசடி செய்துவிட்டதாக ஹேதரின் தனது புகாரில் தெரிவித்திருந்தார். இந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில் பூதப்பாண்டி நீதிமன்றத்தில் இது தொடர்பாக ஹேதரின் மனுத்தாக்கல் செய்தார்.இந்தநிலையில் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கணவர் இம்மானுவேல், மாமியார் லீலாபாய்(50), மாமனார் பிரான்சிஸ் சேவியர்(55) ஆகிய மூன்று பேர் மீதும் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லா, வழக்குபதிவு செய்து இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: