கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிதி நிறுவனங்களின் அடாவடி கடன் வசூலை தடுக்க வேண்டும்

தஞ்சை, டிச. 18: கஜா புயல் பாதித்த பகுதிகளில் நுண்கடன் நிதி நிறுவனங்களின் அடாவடி கடன் வசூலை தடுக்க வேண்டுமென தஞ்சையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பெண்கள் மனு அளித்தனர். தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் அண்ணாதுரை தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் தமிழ்செல்வி, மாவட்ட தலைவர் கலைச்செல்வி தலைமையில் 500க்கும் மேற்பட்ட பெண்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் கோரிக்கை மனு அளித்தனர். அதில் புயலால் பாதிக்கப்பட்ட பேராவூரணி, சேதுபாவாசத்திரம், மதுக்கூர், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில் வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் நுண்கடன் நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் பெற்றுள்ள கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். பெண்கள், மகளிர் சுயஉதவி குழுவினரை மிரட்டி அடாவடியாக வசூல் செய்வதையும், புயலால் வேலைவாய்ப்பு, வருமானம், வாழ்வாதாரத்தை இழந்து தவித்து பணம் கட்ட முடியாமல் இருக்கும் பெண்களை நுண்கடன் நிதி நிறுவனத்தினர் ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் பேசுவதை தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக நிவாரணம் கிடைக்கவில்லை. ஆளுங்கட்சியினருக்கு மட்டுமே வழங்கப்படுவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே பாரபட்சமின்றி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீன்பிடி தொழிலாளர் சங்க சிஐடியூ மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் மீனவர்கள், மீன்பிடி தொழிலாளர்கள் அளித்த மனுவில், தஞ்சை மாவட்டத்தில் கடந்த நவம்பர் 16ம் தேதி வீசிய கஜா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள், மீனவ தொழிலாளர்கள் குடும்பத்துக்கு உடனடி நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். மீனவர் கூட்டுறவு சங்கத்தில் விடுபட்ட அனைவரையும் உறுப்பினராக சேர்க்க வேண்டும். மீனவர் அடையாள அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். சேதமடைந்த நாட்டுப்படகுகள், விசைப்படகுகளுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும். நிவாரணத்தொகையை கூட்டு வங்கி கணக்கில் செலுத்தாமல் மீனவர்கள் கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும். கடலுக்குள் மூழ்கிய படகுகளை அரசே மீட்டுத்தர வேண்டும். சுனாமி வீடுகளில் குடியிருப்போருக்கும் அரசின் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளாங்குடியை சேர்ந்த கதிர்காமம் உள்ளிட்ட பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அதில் திருவையாறு அருகே புனல்வாயில் கிராமத்துக்கு செல்லும் பாதையிலிருந்து களத்துமேடு பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் காவிரி பாசனத்திலும் நிலத்தடி நீரை பயன்படுத்தியும் வேளாண்மை செய்யப்பட்டு வருகிறது. களத்துமேடு பகுதி தானியங்களை உலர வைக்கும் இடமாகவும், அறுவடைக்கு பயன்படும் இடமாகவும் உள்ளது.  தற்போது இங்கு டாஸ்மாக் கடை இயங்குவதால் விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் இப்பகுதிக்கு விவசாய வேலைக்கு வர முடியவில்லை. குறிப்பாக பெண்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் போதையில் கண்ணாடி பாட்டில்களை உடைத்து வயலில் வீசுகின்றனர். இதனால் வயலில் இறங்கி அறுவடை செய்யும்போதும், களை எடுக்கும்போதும் காலில் பாட்டில் துகள்கள் குத்தி காயத்தை ஏற்படுத்துகிறது. மேலும் அப்பகுதியில் மதுபோதையில் வழிபறியும் நடக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றி விவசாயிகளையும், விவசாய தொழிலாளர்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொக்காலிக்காடு கீழக்காட்டைஅதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை தொக்காலிக்காடு கீழக்காடு கிராம மக்கள் அளித்த மனுவில், பட்டுக்கோட்டை அருகே தொக்காலிக்காடு ஊராட்சியில் தொக்காலிக்காடு மேலக்காடு, கீழக்காடு என இரு பகுதிகள் உள்ளன. கஜா புயலால் இப்பகுதி மிகவும் பாதிக்கப்பட்டது. ஆனால் இதுவரை தொக்காலிக்காடு கீழக்காடு பகுதிக்கு கிராம நிர்வாக அலுவலரோ, வருவாய் ஆய்வாளரோ வரவில்லை. தொக்காலிக்காடு மேலக்காடு பகுதியில் 185 குடும்பங்களுக்கு எந்த பாகுபாடுமின்றி நிவாரணங்கள் அளிக்கப்பட்டது. ஆனால் தொக்காலிக்காடு கீழக்காடு கிராமத்தை யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் கிராம மக்களே குடும்ப அட்டை வாரியாக கணக்கெடுப்பு நடத்தி வருவாய் ஆய்வாளரிடம் ஒப்படைத்தோம். உடனடியாக நிவாரணம் வழங்குவதாக சொன்னவர் இப்போது கிடையாது என்கிறார். இதனால் எங்கள் கிராமத்தில் 170 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். இதுகுறித்து பட்டுக்கோட்டை தாசில்தார் அலுவலகத்துக்கு 3 முறைக்குமேல் சென்று முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தொக்காலிக்காடு கீழக்காடு பகுதிக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரசாணை வெளியிட வேண்டும் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தெற்கு மாவட்ட செயலாளர் விவேகானந்தன், மாவட்ட தலைவர் குழந்தைசாமி, நகர தலைவர் ராஜா, சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் ஆரோக்கியதாஸ், பட்டுக்கோட்டை நகர செயலாளர் அந்தோணிராஜ் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர். அதில் குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையர், தேவேந்திர குலத்தார், பள்ளர், வாதிரியார் ஆகிய 7 பிரிவுகளையும் ஒன்றாக இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும். இதுபோலவே தனித்தனி உட்பிரிவு பெயர்களில் அழைக்கப்பட்ட பிற சாதியினர் இதுபோல பெயர் மாற்ற கோரிக்கை வைத்து அது நிறைவேற்றப்பட்டுள்ளது. அப்படி இருக்க தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் கோரிக்கையை மட்டும் நீண்ட காலமாக எல்லா அரசாலும் கிடப்பில் போடப்பட்டு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இது மிகப்பெரிய அநீதியாகும். இதுகுறித்து சட்டரீதியாக பரிசீலனை செய்து அரசுக்கு உரிய பரிந்துரை செய்ய நியமிக்கப்பட்ட நீதிஅரசர் ஜனார்த்தனன் கமிட்டி என்னவானது என்று தெரியவில்லை. எனவே உடனடியாக இந்த 7 பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க அரசாணை வெளியிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: