பட்டுக்கோட்டை அருகே நிவாரணம் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் மறியல் போராட்டம்

பட்டுக்கோட்டை, டிச.16:  கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து பட்டுக்கோட்டை அருகே சூரப்பள்ளம் கிராம பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். பாதிக்கப்பட்ட வீடுகளை பார்க்க வரச்சொல்லி தாசில்தாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கஜா புயல் ஏற்பட்டு   நேற்றுடன் 30 நாட்களாகியும் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல ஊராட்சிகளிலும் தமிழக அரசின் கஜா புயல் நிவாரணம் இன்னும் வழங்கப்படவில்லை. குறிப்பாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பாகுபாடின்றி நிவாரணம் வழங்கப்படவில்லை.

 இதனை கண்டித்து பட்டுக்கோட்டை அடுத்த சூரப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று பட்டுக்கோட்டை-வடசேரி சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பாகுபாடின்றி அனைவருக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். சம்பவ இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை தனி தாசில்தார் (கலால்) சந்தனவேலை முற்றுகையிட்ட பொதுமக்கள்  கஜா புயலால் எங்கள் வீடுகள் போய்விட்டது வந்து பாருங்கள் எனவும், ஏன் நிவாரணப் பொருட்கள் கொடுக்கவில்லை என்றும் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே தாசில்தார் சந்தனவேல் மறியல் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அதன் பேரில் சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் பட்டுக்கோட்டை-வடசேரி சாலையில் சுமார்ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: