திருவிடைமருதூர் அருகே அமமுக ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகியை குற்றம்சாட்டி பேசிய நபரால் பரபரப்பு

திருவிடைமருதூர் டிச16:   திருவிடைமருதூர் அருகே அமமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் லோன் வாங்கி தருவதாக ஒன்றிய செயலாளர் பணம் வாங்கினார் என்று பங்கிரங்கமாக குற்றம்சாட்டி பேசிய நபரால் பரபரப்பு எற்பட்டது. தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அடுத்த திருப்பனந்தாளை அருகே அணைக்கரை கொள்ளிட ஆற்றுபாலத்தின் வழியாக  பேருந்துகளை இயக்க வலியுறுத்தியும், ஒழகச்சேரியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை மூடகோரியும்  அமமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அமமுகவின் மாநில பொருளாளர் ரெங்கசாமி,  ஒன்றிய செயலாளர் பொன்தாமனோகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த  ஆர்ப்பாட்டத்தில் ராஜாராமன் என்பவர், அமமுக ஒன்றிய செயலாளர் பொன்தாமனோகரன் வீட்டு கடன் மற்றும் மாட்டு லோன் வாங்கி தருவதாக ரூ.31 ஆயிரம் வாங்கினார். ஆனால்  இதுவரை எதுவும் செய்து கொடுக்கவில்லை என ஆத்திரத்துடன் அமமுக  ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திலேயே அவருக்கு எதிராக குற்றம்சாட்டி பேசினார். இதனால் ஆத்திரமடைந்த  அமமுக ஆதரவாளர்கள் அந்த நபரை தாக்க முயன்றுள்ளனர். இதனால்  பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து டிஎஸ்பி தலைமையில் போலீசார்  குவிக்கப்பட்டனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டம் அறிவித்தபடி நடைபெற்றது.

  இதுகுறித்து ராஜாராமன் கூறுகையில், நான் பொதுப்பணித்துறையில் பதிவுத்துறை எழுத்தராக பணியாற்றி கடந்த ஓராண்டுக்கு முன்பு ஓய்வு பெற்றுள்ளேன். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக பொன்தாமனோகரன் எனக்கு ரூ.5 லட்சம் வீட்டு லோனும், அதே போன்று மாட்டு லோனும் வாங்கி தருவதாக கூறி என்னிடம் ரூ.31 ஆயிரம் கேட்டார். நானும் கொடுத்தேன். ஆனால் இதுவரை எதுவும் செய்து கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். இதனால் ஆத்திரமடைந்து அவர்கள் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்திலேயே அவர்களிடம் மைக்கை பெற்று சம்பவத்தை தெரிவித்தேன். இதனால் அவர்கள் என்னை தாக்க முயன்றனர் என்றார்.  

Related Stories: