25 ஆண்டாக தூர்வாராததால் தாராசுரம் வாய்க்காலில் கழிவுநீர் தேக்கம்

கும்பகோணம்,டிச.12: கும்பகோணம் அடுத்த தாராசுரத்தில் 25 ஆண்டுகளாக வாய்க்காலை தூர்வாராததால் கழிவுநீர் தேங்கி நிற்பதால் தொற்றுநோய் பரவும் அபாயத்தில் பொதுமக்கள் உள்ளனர். மேலும் வாய்க்கலை விரைந்து தூர்வார வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.கும்பகோணம் அடுத்த வளையப்பேட்டை ஊராட்சி மாங்குடி பகுதியில் உள்ள அரசலாற்றில் இருந்து பிரிந்து தாராசுரம் வழியாக தேப்பெருமாநல்லூர் பகுதிக்கு வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் மூலம் 1000 ஏக்கருக்கு மேல் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.இருப்பினும் கடந்த 25 ஆண்டுகளாக வாய்க்காலை தூர்வாரவில்லை. மேலும் அருகில் குடியிருப்பவர்கள் வீடுகளில் உள்ள குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவைகள் கொட்டுவதால் வாய்க்காலில் தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்பதுடன் தூர்ந்து வருகிறது. அதேபோல் குடியிருப்புகளில் உள்ள கழிவுநீரை வாய்க்காலில் விடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாவதால் அப்பகுதியில் வசிக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து வளையப்பேட்டை ஊராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்ரிடம் பொதுமக்கள் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த வாய்க்காலை தூர்வாராவிட்டால் மழை காலங்களில் தண்ணீர் வெளியேறி தேங்கி வீடுகளை சூழ்ந்து நிற்கும் நிலை ஏற்படும். அப்போது தொற்றுநோய்கள் ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளது.எனவே வளையப்பேட்டை ஊராட்சி தாராசுரத்தில் உள்ள மாங்குடி வாய்க்காலை உடனடியாக தூர்வாரி விரிவாக்கம் பகுதியில் உள்ள பொதுமக்களை காப்பாற்ற வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: