வாய்க்கால்கள் பராமரிப்பு இல்லாமல் அரசு குடியிருப்புகளை சுற்றி தேங்கிய கழிவுநீர்

ராமநாதபுரம், டிச.12: ராமநாதபுரம் ஹவுசிங் போர்டு காலனி பகுதியில் உள்ள அரசு குடியிருப்பு வீடுகள் இடிந்து வருகின்றன. அசம்பாவிதம் ஏற்படும் முன் மராமத்து பணிகள் மேற்கொள்ள அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வளாகப் பகுதியில் அரசு குடியிருப்புகள் அமைந்துள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில் டி பிளாக் சி பிளாக் போன்ற பகுதியில் உள்ள குடியிருப்புகளில் அரசு கடைநிலை ஊழியர்கள், அரசு வாகனங்கள் ஓட்டுனர்கள் குடியிருந்து வருகின்றனர். ஆரம்ப காலத்தில் போர்வெல் மூலம் மோட்டார் வசதியுடன் குடிநீர் வசதி செய்யப்பட்டு இருந்தது. அந்த சமயத்தில் அனைத்து வீடுகளிலும் அரசு ஊழியர்கள் குடும்பத்துடன் தங்கி இருந்தனர். மோட்டார் பழுதானவுடன் குடிநீர் வசதி முழுவதுமாக துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து பல வருடங்களாக வீடுகளில் மராமத்து பணிகள் மெற்கொள்ளவில்லை. தற்போது பல வீடுகள் சேதமடைந்து உள்ளது. இதனால் அங்கிருந்த அரசு ஊழியர்கள் வேறு இடங்களுக்கு சென்று விட்டனர். ஓரளவு சேதமடைந்த வீடுகளில் உள்ளவர்கள் மட்டும் தற்போது அங்கு வசித்து வருகின்றனர். தொடர்ந்து வீடுகள் பராமரிப்பு இல்லாததால் தற்போது சுவர்கள் விறுபட்ட நிலையில் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பல லட்சம் செலவில் கட்டப்பட்ட வீடுகள் தற்போது பயனின்றி உள்ளது.

மாவட்ட நிர்வாகம் சேதமடைந்த வீடுகளை விரைவில் மராமத்து பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென் அரசு ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர். அப்பகுதி ஊழியர்கள் கூறுகையில், கலெக்டர் வளாக பகுதியில் கட்டப்பட்ட அரசு குடியிருப்புகள் தற்போது சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் வீடுகளில் தங்கியிருந்த பெரும்பாலானோர் காலி செய்து விட்டனர். இதுதவிர கழிவுநீர் செல்வதற்கான வாய்க்கால்கள் பராமரிப்பு இல்லாமல் உடைந்து விட்டது. அதனால் கழிவுநீர் குடியிருப்புகளை சுற்றி தேங்கி சுகாதாரக் சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். ராமநாதபுரம் அரசு குடியிருப்பு வீடுகள் இடிந்து வருவதால் மராமத்து பணிகள் மேற்கொள்ள அரசு ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: