நெடுஞ்சாலை நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளால் விபத்தில் சிக்கும் மக்கள்

திருவள்ளூர், டிச. 12: திருவள்ளூரில் நெடுஞ்சாலை நடைபாதையை  ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லும் அவலம் ஏற்பட்டு உள்ளதோடு, விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திருவள்ளூர் ஜெ.என்.சாலை, சி.வி.நாயுடு சாலை, ரயில் நிலையம் செல்லும் சாலை ஆகிய பகுதிகளில், மழைநீர் செல்லும் வகையில் ரூ.25 கோடி செலவில் மழைநீர் கால்வாய் கட்டப்பட்டு உள்ளது. மேலும், சாலையின் நடுவில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது.

அதோடு, மழைநீர் கால்வாய் மீது பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் நடைபாதை அமைத்து, அதன்மீது   டைல்ஸ் பொருத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், இச்சாலைகளில் உள்ள வியாபாரிகள், தங்களது கடைகளின் முன்பு நடைபாதையை ஆக்கிரமித்து மேற்கூரை அமைத்தும், பொருட்களை வைத்தும் வியாபாரம் செய்து வருகின்றனர்.  இதனால், பொதுமக்கள் நடைபாதையில் செல்ல முடியாமல், சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நடந்து செல்லும் நிலை உள்ளது. இவ்வாறு பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லும்போது, பலர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து வருகின்றனர். இவ்வாறு ஆக்கிரமிப்பு கடைகளால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இங்குள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, நடைபாதையை மீட்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories: