ராமநாதபுரம் மாவட்டத்தின் 3 தாலுகாக்களுக்கு வைகையில் இருந்து தண்ணீர் கோரி வழக்கு அரசுக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ்

மதுரை, டிச. 4: ராமநாதபுரம் மாவட்டத்தின் 3 தாலுகாக்களுக்கு வைகையில் இருந்து தண்ணீர் வழங்கக் ேகாரிய வழக்கில், அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. முதுகுளத்தூரைச் சேர்ந்த எம்.பிரபு, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், கமுதி மற்றும் கடலாடி தாலுகாவில் சுமார் 160க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை அதிகளவு உள்ளது. இதனால், பலரும் சென்னை, கோவை போன்ற பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து செல்கின்றனர். மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவையை போக்கிடும் வகையில் வைகையில் இருந்து தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆனால், வைகை ஆறு செல்லும் பரமக்குடி பகுதியில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவிலுள்ள முதுகுளத்தூர், கமுதி மற்றும் கடலாடி தாலுகாக்களுக்கு வைகையில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் மறுக்கின்றனர். இந்த 3 தாலுகா பகுதிக்கும் தண்ணீர் வழங்கும் உரிமை தர மறுக்கப்படுகிறது. பழைய ஆயக்கட்டு முறையில் உள்ளவர்களுக்கே வழங்கப்படுகிறது. புதிதாக வழங்க அதிகாரிகள் தயாரில்லை.

ஒரு மாவட்டத்திற்குள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் வழங்க மறுப்பது நியாயமற்றது. இதனால், வேலைவாய்ப்பு பறிபோகிறது. தண்ணீர் இல்லாததால் ஒரு லட்சம் ஹெக்டேருக்கு மேல் சீமைக் கருவேலம் வளர்ந்துள்ளது. எனவே, இந்த 3 தாலுகா பகுதியையும் புதிய ஆயக்கட்டுதாரர்களாக்கி வைகையில் இருந்து தண்ணீர் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் மனு குறித்து பொதுப்பணித்துறை செயலர், ராமநாதபுரம் கலெக்டர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Related Stories: