கஜா புயல் பாதித்த மக்களுக்கு அரசு அறிவித்த நிவாரண தொகையை கூடுதலாக உயர்த்தி வழங்க வேண்டும் திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்

திருச்சி, நவ.21: கஜா புயல் பாதித்த மக்களுக்கு அரசு அறிவித்த நிவாரண தொகையை கூடுதலாக உயர்த்தி வழங்க வேண்டுமென திருச்சியில் நடந்த திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழகத்தில் சமீபத்தில் வீசிய கஜா புயலின் கோர தாண்டவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கிடுமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளினை ஏற்று கழக தோழர்கள், தொழிலதிபர்கள், தொண்டு நிறுவனங்கள், பொதுநல மன்றங்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு தேவையான உணவு, உடை மருந்துகள், குடிநீர் பாட்டில்கள், அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கிட வேண்டும்.

கஜா புயல் காரணமாக நெல், கரும்பு, வாழை, தென்னை உள்ளிட்ட ஏராளமான பயிர்கள், நிலங்கள், வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. விவசாயிகள், பொதுமக்கள், மிகவும் பாதிக் கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகையை மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளின்படி, கூடுதலாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன், எம்எல்ஏ அன்பில் மகேஷ்பொய்யாமொழி, முன்னாள் எம்எல்ஏக்கள் அன்பில் பெரியசாமி, சேகரன், மாநகர செயலாளர் அன்பழகன், மாவட்ட துணை செயலாளர்கள் விஜயா ஜெயராஜ், குடமுருட்டி சேகர், திருச்சி மக்களவை தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் ஏ.கே.எஸ் விஜயன், சச்சிதானந்தம், புதுகை மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் செல்லபாண்டியன், ரகுபதி, புதுக்கோட்டை பெரியண்ணன்அரசு எம்எல்ஏ உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: