முசிறி பகுதியில் திருக்கார்த்திகைக்கு அகல்விளக்குகள் தயார்

தா.பேட்டை, நவ.21:  முசிறி தாலுகாவில் திருக்கார்த்திகைக்கு அகல்விளக்கு தயாரிக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள் விற்பனை மந்தமாக உள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளனர். திருக்கார்த்திகை திருநாள் வருகிற வெள்ளிக்கிழமை வருகிறது. அன்று கோயில்களிலும், இல்லங்களிலும் தீபம் ஏற்றி வழிபாடு நடைபெறும். பெரும்பாலும் மண்ணால் செய்யப்பட்ட அகல்விளக்குகளையே பொதுமக்கள் வாங்கி பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது.

முசிறி தாலுகாவில் முசிறி, உமையாள்புரம், வெள்ளூர்சத்திரம், காளியாபாளையம், ஏவூர் போன்ற பகுதிகளில் மண்பாண்ட தொழிலாளர்கள் கார்த்திகை திருநாளுக்காக தற்போது அகல் விளக்குகள் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இவ்வாண்டு அகல் விளக்குகள் விற்பனை மிகவும் மந்தமாக உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து மண்பாண்ட தொழிலாளர் சங்கத்தின் பொறுப்பாளர் பெரியசாமி கூறியதாவது:

மண்பாண்ட தொழிலுக்கு தேவைப்படும் களிமண் ஏரி, குளம், குட்டை ஆகியவற்றில் எடுக்க அரசு அனுமதி வழங்க வேண்டும். மண் எடுப்பதற்கான நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும். பொதுமக்கள் களிமண்ணால் தயார் செய்யப்பட்ட சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத அகல் விளக்குகளை வாங்க வேண்டும். இதனால் ஏழை தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் என்றார்.

முசிறி, உமையாள்புரம், வெள்ளூர்சத்திரம், காளியாபாளையம், ஏவூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள் முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனுவில், மண்பாண்ட தொழில் செய்பவர்களுக்கு தமிழக அரசு  வருடந்தோறும் மழைக்கால உதவித் தொகை ரூ.5 ஆயிரம் வழங்கி வந்தது. இத்தொகை 2.7.2014 முதல் வழங்கப்படவில்லை. எனவே மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரண உதவித் தொகை கிடைத்திட ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். நசிந்த நிலையில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் கார்த்திகை தீபத்திற்கு அகல் விளக்குகளை வாங்கினால் ஏழைத் தொழிலாளர்களின் வறுமையும் சற்று அகலும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

Related Stories: