பெருந்துறை ஆர்டிஓ அலுவலகத்தில் புதிய வாகன உரிமையாளர்களிடம் கட்டாயப்படுத்தி கொடி நாள் வசூல்

பெருந்துறை, நவ. 21:  பெருந்துறையில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புதிய வாகன உரிமையாளர்களிடம் கட்டாயப்படுத்தி கொடி நாள் வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது.பெருந்துறையில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புதிய இரு சக்கர வாகனங்களின் பதிவு நடக்கிறது. புதிய இருசக்கர வாகனங்கள் வாங்கியவர்கள் தனது ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை ஆகியவை கொண்டு வந்து வட்டார போக்குவரத்து ஆய்வாளரிடம் காட்டி பதிவு செய்துகொள்ள வேண்டும். வாகனங்களின் ஆவணங்களை அதன் டீலர்களின் பிரதிநிதி ஒருவர் நேரில் வந்து சமர்பித்து பதிவு செய்யும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

பெருந்துறை சந்தை பேட்டை வளாகத்தில் உள்ள போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெறும் புதிய பதிவிற்கு நாளொன்றுக்கு 100க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் வருகிறது. இங்கு வரும் வாகன உரிமையாளர்களிடம் டீலர்களின் பிரதிநிதிகள் கொடி நாள் வசூல் என கூறி ஒவ்வொரு வாகனத்திற்கும் தனித்தனியாக ரூ.250 முதல் ரூ.350 வரை வசூல் செய்கின்றனர். இதற்கு கொடியோ ரசீதோ ஏதும் தருவதில்லை. இதனை கொடுக்காவிட்டால், வாகன பதிவு நடக்காதென மிரட்டப்படுவதால் வேறு வழியின்றி வாகன உரிமையாளர்கள் கொடுக்கின்றனர்.  ஏற்கனவே புதிய வாகனம் எடுக்கும் போது ஐந்து வருட இன்சூரன்ஸ், சாலைவரி, வாகனவரி என ஒவ்வொரு வாகனத்திற்கும் கூடுதலாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை செலவழிக்கும் நிலையில் கொடி நாள் வசூல் என கட்டாயப்படுத்தி வசூல் செய்வதால் வாகன உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Related Stories: