மக்களுக்கான நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும்

திருச்சி, நவ.20:  புயல் பாதித்த மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என திருச்சியில் பிரேமலதா தெரிவித்தார். திருவாரூர், நாகை, தஞ்சை மாவட்டங்களில் கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக சென்னையில் இருந்து நேற்று விமானம் மூலம் திருச்சி வந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கஜா புயலால் மீனவர்கள், விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 வருடங்களாக வளர்த்த தென்னை மரங்கள் , வாழை மரங்கள் விழுந்துள்ளது மக்களுக்கு பெரிய பாதிப்பு. இந்த நிலை மாற வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கான உரிய நிவாரண நிதியை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். மின்சாரம், சாலைகள் ஆகியவற்றை விரைவாக சரி செய்ய வேண்டும்.

தமிழக அரசின் செயல்பாடுகளை முதல் நாள் கஜா புயல் வரும் போது விஜயகாந்த் பாராட்டியிருந்தார். அதன் பின் அரசின் செயல்பாடுகள் மெதுவாக இருக்கிறது என மக்களே தெரிவிக்கின்றனர். அவர்களுக்கு மின்சாரம் இல்லை.  இதனால் பல பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். உரிய நிவாரண நிதி பாதிக் கப்பட்ட மக்களிடம் சரியான முறையில் சேர்ந்தால் இந்த பிரச்னை சரி செய்யப்படும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் இல்லை என்பது மிக பெரிய குறையாக உள்ளது. அமைச்சர்களே உள்ளே செல்ல முடியாத நிலை உள்ளது. அமைச்சர் ஓஎஸ் மணியன் சுவர் ஏறி குதித்து ஓடும் காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்தோம். அதேபோல் முதல்வர் பாதிக்கப்பட்ட மக்களை சென்று சந்திக்க முடியாத அளவிற்கு அங்கு பிரச்னை நீடிப்பதால் சந்திப்பு நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டார். இவ்வாறு பிரேமலதா கூறினார்.

Related Stories: