புயல் பாதித்து 4 நாளாகியும் அதிகாரிகள் வராததால் மணப்பாறை அருகே 7 இடங்களில் மறியல்

மணப்பாறை, நவ.20:  கஜா புயல் பாதித்து 4 நாட்களாகியும் அதிகாரிகள் வராததால் மணப்பாறை அருகே போராட்டம் நீடிக்கும் நிலையில் நேற்று 7 இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரியில் உள்ள 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் கஜா புயலால் ஏராளமான குடியிருப்புகள் சேதமடைந்தது. மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்ததால் மின்சாரம் மின்சாரம் இல்லாமலும், குடிநீரின்றியும் மக்கள் கடந்த 4 நாட்களாக தவித்து வருகின்றனர். மணப்பாறை தாலுகா பகுதிகளில் சாய்ந்து கிடக்கும் மின்கம்பங்களையும், மரங்களையும் அப்புறப்படுத்தி வருகின்றனர். கே.பெரியபட்டி ஊரா ட்சி பகுதிகள், மரவனூர், கண்ணுடையான்பட்டி ஊராட்சி, உடையாப்பட்டி, மொண்டிப்பட்டி செல்லும் சாலையில் உள்ள 15க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால் சுற்று வட்டார பகுதிகளில் மின் விநியோகம் இல்லை.

புயலில் சேதமடைந்த பகுதிகளை நான்கு நாட்களாகியும் அமைச்சர், அதிகாரிகள் வந்து பார்க்கவில்லை. மின்சாரம், தண்ணீரின்றி அவதிப்பட்டு வரும் மக்கள் மறியல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கோவில்பட்டி, காந்திநகர், கோவிந்தராஜபுரம் மற்றும் பல கிராமங்களில் கடந்த 3நாட்களாக மின்சாரம், குடிநீர் வரவில்லை. இதனால் பாதிக்கப்பட்டு ள்ள மக்கள் அதிகாரிகள் வராததை கண்டித்து கோவில்பட்டியில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மணப்பாறை- கோவில்பட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதே கோரிக்கையை வலியுறுத்தி சிதம்பரத்தான்பட்டி, வெள்ளக்கல், கல்பாளையத்தான்பட்டி, மணப்பட்டி, தீராம்பட்டி, காமராஜர் சிலை ஆகிய கிராமங்களில் அதிகாரிகள் வராததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கஜா புயல் பாதித்து 4 நாட்களாகியும் அதிகாரிகள் வராததால் மணப்பாறை அருகே  நேற்று 7 இடங்களில் நடந்த மறியல்  போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மணப்பாறையில் நேற்றிரவு சில பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது.

Related Stories: