ஆன்மிக மலர் சனிதோறும் படியுங்கள் கஜா கலக்கத்தில் இருந்து மீள்வதற்குள் மின்சாரம் துண்டிப்பால் பரிதவிப்பு

திண்டுக்கல், நவ. 20: நேற்று மாலை திண்டுக்கல்லில் அதீத இடிச்சப்தத்துடன் கனமழையும் சேர்ந்து கொண்டது. ஏற்கனவே கஜா புயலில் மிரண்டு போயிருந்த மக்களுக்கு இந்த மாறுபட்ட சூழ்நிலை மேலும் அச்சத்தை ஏற்படுத்தியது. கடந்த 16ம் தேதி கடலோர மாவட்டங்களுக்கு கஜா புயல் எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டது. இருப்பினும் திண்டுக்கல் மாவட்டத்திலும் இதன் தாக்கம் இருக்கும். மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. எனவே வழக்கமான புயலுக்கான மழை என்று சாதாரணமாக நினைத்திருந்தனர். ஆனால் கடலில் இருந்து வெளியேறிய கஜா நிலத்தின் வழியே குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தை ஊடுருவத் துவங்கியது. அதனால் சூறைக்காற்றும், கனமழையும் மாவட்டத்தை புரட்டிப் போட்டது. கொடைக்கானல், திண்டுக்கல், பழநி, வத்தலக்குண்டு, நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டன. குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.

மலைப்பகுதி போக்குவரத்து முற்றிலும் முடங்கின. விவசாயப்பகுதியில் நீர் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. திண்டுக்கல்லில் இதுவரை புயல் நேரடியாக வந்தது கிடையாது. புயலின் தாக்கமே இருந்துள்ளது. இந்நிலையில் இந்த வரலாற்றை கஜா முறியடித்துள்ளது. இதன் பாதிப்பில் இருந்தே மீளாத நிலையில் நேற்று பிற்பகல் 4.30 மணிக்கு வானம் இருண்டது. எப்போது இல்லாத அளவிற்கு அதீத சப்தத்தில் இடிச்சத்தம் எழுந்தது.

இதனால் பலரும் மிரண்டு போயினர். தொடர்ந்து கனமழை பெய்ய துவங்கியது. சுமார் அரைமணி நேரம் பெய்த இந்த மழையினால் சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. வழக்கம்போல மழைநேர மின்துண்டிப்பும் மேற்கொள்ளப்பட்டது. கஜா புயலின் தாண்டவத்தை நேரில் பார்த்ததால் மிரண்டு போயிருந்த மக்களுக்கு நேற்று திடீரென்று ஏற்பட்ட அதீத இடிச்சப்தம் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியது.

Related Stories: