தஞ்சை மாவட்டத்தில் புயல் பாதிப்பு மீட்பு பணிகளில் 7,000 பேர் ஈடுபட்டு வருகின்றனர்

தஞ்சை, நவ. 20:  தஞ்சை மாவட்டத்தில் கஜா புயல் பாதிப்பு மீட்பு பணிகளில் 7,000 பேர் ஈடுபட்டு வருகின்றனர் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் அண்ணாதுரை தலைமை வகித்தார்.  பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாநிலங்களவை எம்பி வைத்திலிங்கம் ஆகியோர் பங்கேற்று புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 கிலோ அரிசி, 1 லிட்டர் மண்ணெண்ணெய், வேட்டி மற்றும் சேலைகள், முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.5,000, பகுதியளவு சேதமடைந்த குடியிருப்புகளுக்கு ரூ.4,100 என பாதிக்கப்பட்ட 206 பேருக்கு ரூ.9.19 லட்சம் உதவித்தொகை வழங்கினர்.

இதைதொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு உள்ளிட்ட தாலுகாக்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டதால் தமிழக முதல்வர் உத்தரவின்படி மீட்பு பணிகளை விரைவுப்படுத்த 4 அமைச்சர் தலைமையிலான குழுக்கள் தஞ்சை மாவட்டத்துக்கு வந்துள்ளது. வீட்டின் மண்சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 5 பேருக்கு தமிழக அரசின் சார்பில் தலா ரூ.10 லட்சம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கஜா புயலால் இறந்த நபர்கள் குறித்து காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் 741 கால்நடைகள் இறந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. தற்போது 33 நிவாரண முகாம்களில் 2,789 ஆண்கள், 3,895 பெண்கள், 1,390 குழந்தைகள் என மொத்தம் 8,074 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 30 மருத்துவ குழுக்கள் மூலம் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. கஜா புயலால் சேதமடைந்த விவசாயிகளின் தென்னை மரங்கள், இதர பயிர்களின் விவரங்கள் மற்றும் மீனவர்களின் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளின் விவரங்களை முழுமையாக கணக்கெடுக்க கிராம அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. அப்பணி முடிந்த பிறகு பாதிப்புகளின் விவரங்கள் முழுமையாக தெரியவரும்.

நெடுஞ்சாலைகளில் பெயர்ந்து விழுந்த 68,882 மரங்கள் முழுமையாக வெட்டி அகற்றப்பட்டு சாலை போக்குவரத்து முழுவதுமாக சீர் செய்யப்பட்டுள்ளது. கஜா புயல் பாதிப்புகளை சீரமைக்க மின்வாரியத்தில் 1,180 பணியாளர்கள், நெடுஞ்சாலைத்துறையில் 490 பணியாளர்கள், பொதுப்பணித்துறையில் 50 பணியாளர்கள், ஊரக வளர்ச்சித்துறையில் 2,800 பணியாளர்கள், பேரூராட்சி துறையில் 863 பேர், மாநகராட்சி, நகராட்சியில் 1,112 பேர் என மொத்தம் 7,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நிவாரண பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வருகிறார். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

Related Stories: