வேளாண் அதிகாரிகள் ஓரளவு சாய்ந்த மரங்களை காப்பாற்ற ஆலோசனை வழங்க வேண்டும்

அறந்தாங்கி, நவ.20:  கஜா புயலின் தாக்குதலால் ஓரளவு பாதிக்கப்பட்டுள்ள தென்னை உள்ளிட்ட மரங்களை வேளாண்மைத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு விவசாயிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் உள்பட 8 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் பல லட்சம் தென்னை, தேக்கு, பலா, மா, புளி, சந்தனம், மகோகனி, வாழை உள்ளிட்ட மரங்கள் சாய்ந்துள்ளன. விவசாயிகளின் வாழ்வாதாரமான தென்னை மரங்கள் சாய்ந்ததால், விவசாயிகள் அடுத்து என்ன செய்வது என தெரியாமல், குடும்பத்தினருடம் சோறு தண்ணீ உண்ணாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். அவர்களுக்கு ஆறுதல் சொல்ல முடியாத அளவிற்கு உறவினர்கள், நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர் என அனைவரும் இந்த புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போதுள்ள நவீன தொழில் நுட்பத்தில் சாலைகளை விரிவாக்கம் செய்யும்போது, சாலையோரம் இருந்த மரங்களை பெயர்த்து வேறு இடத்தில் வைத்து துளிர்க்க வைப்பது சாதாரணமாக நடந்து வருகிறது. வெளிநாட்டிலும் இந்த தொழில்நுட்பம் பெரிய அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் கஜா புயலால் முழுதும் பாதிக்காமல் ஓரளவு சாய்ந்த தென்னை, பலா, மா, புளி, சந்தனம், மகோகனி போன்ற மரங்களை உயர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, துளிர்க்க வைக்க முடியும். ஆனால் விவசாயிகள் தற்போது உள்ள மனநிலையில் சாய்ந்து கிடக்கும் மரங்களுக்கு மறு உயிர் கொடுக்க முடியாத நிலையில் உள்ளனர்.

எனவே தமிழக அரசு தமிழகத்தின் கஜா புயல் பாதிப்பில்லாத மாவட்டம், அண்டை மாநிலங்களில் இருந்தும், வேளாண்மை பல்கலைக்கழகம், வேளாண் கல்லுhரிகளில் இருந்தும் புயல் பாதித்த புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கும் அனுப்பிவைத்து, மீண்டும் மறு உருவாக்கம் செய்யக்கூடிய மரங்களை நேரில் வந்து ஆய்வு செய்து, மரங்களை நிமிர்த்து, அந்த மரங்களை உயிராக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த மரங்கள் மீண்டும் உயிர் பெற தேவையான உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை முழு மானியமாக வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: