பயனில்லாத நிழற்குடைகள் பயணிகள் கடும் அவதி

ராமநாதபுரம், நவ. 16: ராமநாதபுரத்தை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் பயணிகள் நிழற்குடை அனைத்தும் சேதமடைந்துள்ளதால் பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். அசம்பாவிதம் ஏற்படும் முன் மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். ராமநாதபுரம் சுற்றிலும் ராமநாதபுரம், நயினார்கோவில், போகலூர் ஒன்றியங்களில் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கிராம மக்களின் வசதிக்காக நிழற்குடைகள் கிராமங்கள் தோறும் கட்டப்பட்டுள்ளன. பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட அவைகள் தற்போது முறையான பராமரிப்பு இல்லாதால் பல இடங்களில் உடைந்து விழும் நிலையில் உள்ளது.  ராமநாதபுரம் அருகே காருகுடி, சாலைவலசை, உத்திரகோசமங்கை, பரமக்குடி அருகே மேலாய்குடி, நயினார்கோவில் என அதன் பட்டியல் நீளுகிறது. பல நிழற்குடைகள் கான்கிரிட் சுவர்கள், மேற்கூரைகள் உடைந்து விழுகின்றன. தரைப்பகுதியில் சிமென்ட் பூச்சு உடைந்து செங்கல் முழுவதும் வெளியில் தெரிகின்றன. இதனால் தற்போது கிராம மக்கள் நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். பழுதடைந்த நிழற்குடைகளை மாற்ற கிராம மக்கள் யூனியன் அலுவலகத்தில் பலமுறை மனுக் கொடுத்தும் முறையான நடவடிக்கை இல்லை.

பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன் சம்மந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் யூனியன் அலுவலகம் மூலம் விரைவில் நிழற்குடைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கிராம மக்கள் பலர் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து சாலைவலசையை சேர்ந்த செந்தூர் கூறுகையில், ‘நிழற்குடைகள் பராமரிப்பு இல்லாததால் எந்நேரமும் உடைந்து விழும் என்ற அச்சத்தில் பயணிகள் உள்ளனர்.  இதனால் வெயில், மழை காலங்களில் பயணிகள் நிழற்குடையின் உள்ளே செல்லவே விரும்புவதில்லை. மழைக்காலத்தின்போது பல இடங்களில் நிழற்குடைகள் மழைநீரில் தத்தளிக்கின்றன. கிராம மக்களின் நலன் கருதி சேதமடைந்துள்ள நிழற்குடைகளை கணக்கெடுத்து மராமத்து பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதவிர நிழற்குடை முன்பு உள்ள செடி, கொடிகளை வெட்டி எறிய வேண்டும்’ என்றார்.

Related Stories: