கார்த்திகை திருநாளையொட்டி கீழவாசல் டவுன்கரம்பை பகுதியில் அகல் விளக்கு தயாரிக்கும் பணி மும்முரம்

தஞ்சை, நவ. 15: கார்த்திகை திருநாளையொட்டி தஞ்சை கீழவாசல் டவுன்கரம்பை பகுதியில் அகல் விளக்கு தயாரிக்கும் பணி மும்மரமாக நடந்து வருகிறது.

தமிழர்களின் கடவுளான முருகப்பெருமானின் கார்த்திகை மாத விரதம் துவங்கி சூரசம்ஹார விழா நிறைவு பெற்றுள்ளது. இதைதொடர்ந்து வரும் 23ம் தேதி கார்த்திகை பெருவிழா நடைபெறவுள்ளது. இதையொட்டி தஞ்சை கீழவாசல் பகுதியில் கார்த்திகை அகல் விளக்குகள் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். கார்த்திகை திருவிழாவுக்கு இன்னும் 8 நாட்களே இருப்பதால் கார்த்திகை அகல் விளக்கை தயார் செய்து வெயிலில் காயவைத்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் இருப்பதால் கார்த்திகை அகல் விளக்கு தயார் செய்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. எனவே இதை பயன்படுத்தி கொண்டு அகல் விளக்கை தயார் செய்து அருகில் உள்ள மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்க தயாராகி வருகின்றனர்.

இதுகுறித்து அகல் விளக்கு தயார் செய்யும் தொழிலாளர்கள் கூறியதாவது: மண்பாண்டம் தொழில் செய்வோர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வருகிறது. இளைய தலைமுறையினர் இந்த தொழிலை செய்வதில்லை. இதற்கு காரணம் இந்த தொழிலுக்கு அரசு ஊக்கம் அளிப்பதில்லை. எந்த தொழில் துவங்கவும் அரசு கடனுதவி வழங்குகிறது. ஆனால் மண்பாண்டம் தொழில் செய்ய அரசு கடனுதவி வழங்குவதில்லை. மழை காலங்களில் மண்பாண்டம் தொழில் முற்றிலும் முடங்கி போய்விடும். இந்த காலத்தில் பிழைப்புக்கு என்ன செய்வது. அதுபோல் கோயில்களில் அகல் விளக்கு ஏற்ற தடை விதித்ததால் அகல் விளக்கு தயார் செய்யும் பணியும் முடங்கி விட்டது. மண்பாண்டம் தயார் செய்ய தேவையான களிமண் கிடைப்பது அரிதாகி விட்டது.

ஒரு லோடு களிமண் விலை ரூ.30 ஆயிரமாகிவிட்டது. களிமண் ஏற்றி வரும் நபர்கள் மீது பொதுப்பணித்துறையினரும், போலீசாரும் வழக்கு போடுவதால் அதை ஏற்றிவர லாரி உரிமையாளர்கள் அச்சம் அடைகின்றனர். இவ்வாறு நாளுக்குநாள் இந்த தொழில் பின்னோக்கி செல்கிறது. இருப்பினும் எங்களது கைத்தொழிலை விட்டு விடக்கூடாது என்பதற்காக கார்த்திகை மாத அகல் விளக்கு தயார் செய்து வருகிறோம். ஒரு விளக்கின் விலை 70 பைசா ஆகும். மண்பாண்டம் தயார் செய்யும் தொழிலாளர்களுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும். வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories: