உலக அளவில் இந்தியா முதலிடம் இரவுநேர முழுதூக்கம் நீரழிவு, புற்றுநோயை தடுக்கும்

சேலம், நவ.15:இரவு நேர முழுதூக்கத்தால் நீரழிவு நோய், புற்றுநோய் வராமல் தடுக்கலாம் என சேலத்தில் மருத்துவர் சிவராமன் தெரிவித்தார்.

சேலம் போஸ் மைதானத்தில் முதலாவது புத்தக திருவிழா நடந்து வருகிறது. இதனையொட்டி நேற்று நடந்த சிறப்பு கருத்தரங்கில், பிரபல மருத்துவர் சிவராமன் கலந்து கொண்டு, ‘இனிப்பு தேசம்’ என்ற தலைப்பில் பேசியதாவது: இந்தியாவில், 15 கோடி நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரழிவு நோய் பாதிப்பில், உலக அளவில் முதலிடம் வகிக்கும் இந்தியாவை, இனிப்பு தேசம் என அழைக்கின்றனர். இவர்களில் 7.50 கோடி பேர் தங்களுக்கு நீரழிவு நோய் இருப்பது தெரிந்தும், 7.50 கோடி பேர் தங்களுக்கு நோய் பாதிப்பு இருப்பது தெரியாமலும் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளில் நடந்த உணவு பழக்கவழக்க மாற்றங்களே நீரழிவு நோய் தாக்கத்திற்கு முக்கிய காரணம்.

இயற்கை உணவுகள் மறைந்த அதே சமயத்தில், வீரிய ஒட்டுரக உணவுகளால் மண்ணும், மனித உடலும் பாதிக்கப்பட்டுள்ளது. தானியங்களை அதிகளவில் உட்கொள்ள வேண்டும். உணவில் சேர்க்கப்படும் பெருங்காயம், வெங்காயம் மற்றும் வெள்ளை பூண்டு ஆகியவை மணமூட்டிகள் மட்டுமின்றி, சிறந்த மருந்துகளாகும். மெலனின் என்ற சுரப்பியால், நீரழிவு மற்றும் புற்றுநோய் தடுக்கப்படுகிறது. ஆனால், இந்த சுரப்பி இரவு நேர முழு தூக்கத்தின் போது மட்டுமே சுரக்கும். நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு புற்றுநோய் வரும். வெளிநாடுகளைப் போல, சித்தா, யுனானி, அலோபதி ஆகியவை இணைந்த கூட்டு மருத்துவ முறையை அமல்படுத்தினால், பல்வேறு நோய்களை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு மருத்துவர் சிவராமன் பேசினார்.

Related Stories: