கஜா புயல் எதிரொலி ஈரோட்டில் கன மழைக்கு வாய்ப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயார்

ஈரோடு, நவ. 15: ஈரோடு மாவட்டத்தில் இன்று(15ம்தேதி) முதல் 17ம் தேதி வரை கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு முதன்மை செயலர் பாலசந்திரன் தெரிவித்தார்.ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கதிரவன் தலைமை வகித்தார். இதில் அரசு முதன்மை செயலரும், வணிக வரி மற்றும் பதிவுத்துறை கண்காணிப்பு அலுவலருமான பாலசந்திரன் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.

 இக்கூட்டத்தில் அரசு முதன்மை செயலர் பாலசந்திரன் தெரிவித்ததாவது: கஜா புயல் எதிரொலியால் வானிலை ஆராய்ச்சி மையம் தகவலின் படி ஈரோடு மாவட்டத்தில் 15ம் தேதி(இன்று) முதல் 17ம் தேதி வரை மூன்று நாட்கள் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இதனால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டை, நீர்வரத்துக் கால்வாய்கள், நீர்வெளியேறும் கால்வாய்கள் ஆகியவற்றை கண்காணிக்க 14 பேரிடர் மேலாண்மை ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. வெள்ள நீர் வெளியேறும் பாதையில் உள்ள பாலங்கள் செடிகொடிகள் அகற்றப்பட்டு தடைகள் ஏதும் இன்றி வெள்ளநீர் வெளியேற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 பேரிடர் மீட்பு பணி மேற்கொள்ள 24 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 14 ஜேசிபி வாகனங்கள், 2 படகுகள், 17 பரிசல்கள், 10ஆயிரம் மணல் மூட்டை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களை வெள்ள பாதிப்பில் இருந்து பாதுகாக்க மற்றும் தங்க வைக்க 95 மையங்கள் தேர்வு செய்யப்பட்டு அனைத்து அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளது.  மேலும், மாவட்டம் முழுவதும் ஒரு மருத்துவர் 3 உதவியாளர் என சுமார் 42 மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில்  உள்ளது. எனவே பொதுமக்கள் எந்தவித அச்சமோ, பதட்டமோ அடையத் தேவையில்லை, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அரசு முதன்மை செயலர் பாலசந்திரன் தெரிவித்தார்.  இந்த கூட்டத்தில் ஈரோடு எஸ்பி சக்திகணேசன், டிஆர்ஓ கவிதா, திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) பாலகணேசன், மாநகராட்சி கமிஷனர் சீனி அஜ்மல்கான் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: