வத்தலக்குண்டு அருகே அரசுப் பள்ளிக்கு கல்விச்சீர்வரிசை கொட்டு மேளத்துடன் ஊர்வலமாக வந்த மக்கள்

வத்தலக்குண்டு, நவ. 15: வத்தலக்குண்டு அருகே கிராம மக்கள் திரண்டு கொட்டு மேளம் முழங்க, பட்டாசு வெடித்து ஊர்வலமாகச் சென்று அரசு |பள்ளிக்கு பீரோ, டேபிள் உள்பட பல்வேறு பொருட்களை கல்விச்சீராக வழங்கினர். வத்தலக்குண்டு அருகே உள்ளது கட்டக்காமன்பட்டி கிராமம். இங்கு 700 வீடுகள் உள்ளன. சுமார் 2500 பேர் வசிக்கின்றனர். இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக சேதமடைந்த நிலையிலுள்ள ஓட்டுக் கட்டிடத்தில் இயங்கி வந்தது. குறைந்த அளவே மாணவர்கள் படித்து வந்தனர். இந்த பள்ளியில் பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த விஜயா 5 ஆண்டுகளுக்கு முன்பு தலைமை ஆசிரியராக பதவியேற்றார். அதன்பிறகு அரசிடம் கேட்டு புதிய கட்டிடம் பெற்றார். பல சமூக சேவை தொண்டு நிறுவனங்களிடம் கேட்டு மேடை, நவீன டேபிள், சேர், கம்ப்யூட்டர் போன்ற கல்வி உபகரணங்கள் பெற்று தனியார் பள்ளி தரத்திற்கு உயர்த்தினார். சுகாதாரத்தை போற்றி, மரக்கன்று நட்டு பள்ளியை பூஞ்சோலையாக்கினார்.

Advertising
Advertising

இதைத்தொடர்ந்து மாநில அளவில் சுகாதாரத்திற்கான சிறந்த பள்ளி விருதை இப்பள்ளி பெற்றது. பள்ளி மாணவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே இருந்தது. இப்பள்ளி மாணவர்கள் பல போட்டிகளில் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். பள்ளியின் பெருமையால் மகிழ்ச்சியடைந்த கட்டக்காமன்பட்டி கிராம மக்கள் பள்ளிக்கு சீர்வரிசை கொடுக்க முடிவு செய்தனர். அதன்படி பள்ளிக்கு தேவையான பீரோ, டேபிள், சேர், தண்ணீர் குடங்கள் உள்பட ஏராளமான பொருட்களை மக்கள் சுமந்தவாறு கொட்டு மேளம் முழங்க, பட்டாசு வெடித்து நேற்று ஊர்வலமாக வந்து பள்ளிக்கு தங்கள் சீர்வரிசையை அளித்தனர். அதன்பிறகு நடந்த விழாவுக்கு மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் எஸ்தர் ராஜம், அங்கயற்கன்னி, டாக்டர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா வரவேற்றார. வத்தலக்குண்டு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வாழ்த்தி பேசினார்.ஊர் பெரியதனம் ராமசாமி கந்தன், ஊர் பிரமுகர்கள் சரவணன், வெள்ளைச்சாமி உள்பட பலர் பேசினர். ஆசிரியர் பாலமுருகன் தொகுத்து வழங்கினார். ஊராட்சி செயலாளர் பிரபு, ஆசிரியர்கள், பெற்றோர், மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் அருள்மொழி செல்வி நன்றி கூறினார்.

Related Stories: