சேலம் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தொற்றுநோய் பரவாமல் தடுக்க 20 மருத்துவக்குழு

சேலம், நவ.8: சேலம் மாவட்டத்தில் கால்நடைகளுக்கான தொற்றுநோய் பரவாமல் தடுக்க 20 கால்நடை மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பருவநிலை மாற்றம் மற்றும் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதை அடுத்து, கால்நடைகளுக்கு நோய் தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நோய் தொற்று ஏற்பட்டால் அவற்றை பரவாமல் தடுக்க, கால்நடை பராமரிப்புதுறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே சேலம் மாவட்டத்தில், 20 கால்நடை மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்க நடவடிக்ைக எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:பருவமழை காலம் என்பதால், கால்நடைகளுக்கு பல்வேறு நோய் தொற்று ஏற்படலாம். எனவே, கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளை கட்டும் இடத்தில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். நோய் அறிகுறி தென்பட்டால் உடனடியாக பாதிக்கப்பட்ட கால்நடைகளை தனியே பிரித்து வைக்க வேண்டும். அவற்றின் கழிவு தீவனம், புல்வகைகளை தீயிட்டு கொளுத்த வேண்டும். கட்டுத்தரையில் சலவை சோடா கரைசல் கொண்டு தினமும் தெளிக்க வேண்டும். நோயுற்ற மாடுகளின் வாய் மற்றும் ஈறுகளை, பொட்டாசியம் பர்மாங்கனேட் கரைசல் கொண்டு கழுவ வேண்டும். மேலும், கால் குளம்புகளில் புண்கள் ஏற்பட்டால் ஈக்கள் மொய்க்காத வண்ணம் வேப்பெண்ணை தடவ வேண்டும்.

மாடுகளுக்கு நாக்கினை உறுத்தாத கொத்தமல்லி கீரை, அருகல்புல் மற்றும் கலப்பு தீவனத்தை கரைத்து கொடுக்கலாம். நோயுற்ற மாடுகளை பராமரிப்பவரும், பால் கறப்பவரும் கிருமி நாசினி கொண்டு அவ்வப்போது கையை கழுவி கொள்வது அவசியம். அதேசமயம், நோயுற்று மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்ப கூடாது. நோயுற்ற பகுதிகளில் புதிதாக மாடுகளை வாங்கவோ, விற்கவோ கூடாது. நோயுற்ற மாடுகளை பராமரிப்பவரும், பால் கறப்பவரும் ஆரோக்கியமான மாடுகள் இருக்கும் பகுதிகளுக்கு செல்லக் கூடாது. நோயுற்ற மாடுகளின் கால்கள் மற்றும் வாய்களை கழுவும் பொழுது கொதிநீர் பயன்படுத்தக் கூடாது. மருத்துவர் அல்லாதவரை கொண்டு தவறான சிகிச்சை அளிக்கக் கூடாது. நோயுற்ற மாடுகளில் கன்றுகள் நேரிடையாக பாலூட்ட அனுமதிக்கக் கூடாது. நோயுற்ற மாடுகள் சேறு, சகதி நிறைந்த பகுதிகளில் நிற்க கூடாது. கால்நடைகளுக்கு தொற்றுநோய் ஏற்பட்டால், அருகில் உள்ள அரசு கால்நடை உதவி மருத்துவருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

Related Stories: