சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை, குடந்தையில் கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை, நவ.2: தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் 2வது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டம் நேற்று நடைபெற்றது.

 தஞ்சை ஆர்டிஓ அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை வட்ட தலைவர் முரளி தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் மாணிக்கவாசகம் வரவேற்றார். தஞ்சை வட்ட பொருளாளர் குமார், வட்டத் தலைவர்கள் திருவையாறு வடிவேல், ஒரத்தநாடு மோகன், பூதலூர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அலுவலக உதவியாளர்களுக்கு இணையான அடிப்படை ஊதியமான ரூ.15 ஆயிரத்து 700 வழங்க வேண்டும். காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் போன்று கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் கணக்கீடு செய்து வழங்க வேண்டும். காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்குவது போல் போனஸ் ரூ.3,500 வருவாய்த்துறை கிராம உதவியாளர்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 2வது நாளாக நேற்று நடந்த வேலை நிறுத்த போராட்டத்தில் தஞ்சை கோட்டத்தை சேர்ந்த 429க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.

கும்பகோணம்: கும்பகோணம் சப்.கலெக்டர் அலுவலகம் முன் நேற்று நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர்  வின்சென்ட், விஏஓ முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர்.

 ஆர்ப்பாட்டத்தில், கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முழக்கங்களாக எழுப்பப்பட்டன. கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் வட்டங்களை சேர்ந்த கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

  இந்நிலையில் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்டத்தில் உள்ள 650 கிராம உதவியாளர்கள் 2வது நாளாக நேற்று  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: