அஞ்சுகிராமம் பஸ் நிலையத்தில் பயங்கரம் மினிடெம்போ டிரைவர் குத்திக்கொலை

அஞ்சுகிராமம், நவ.1: அஞ்சுகிராமம் பஸ்நிலையத்தில் பயணிகள் கண் முன் மினிடெம்போ டிரைவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அஞ்சுகிராமம் அருகே உள்ள மேட்டுக்குடியிருப்பை சேர்ந்தவர் பொன்பாண்டியன் நாடார் மகன் சுயம்புலிங்கம்(35). திருமணம் ஆகாதவர். இவர் மினி டெம்போவில் தண்ணீர் கேன் விநியோகம் செய்யும் பணி செய்து வந்தார். நேற்று மாலை அஞ்சுகிராமம் பேருந்து நிலையம் உள்புறம் உள்ள கடைகளுக்கு தண்ணீர் கேன் விநியோகம் செய்து கொண்டிருந்தார். அப்போது அஞ்சுகிராமத்தை சேர்ந்த தங்கத்துரை மகன் ஆனந்த் என்பவர் அவ்வழியாக பைக்கில் வந்தார். அப்போது மினிடெம்போவை ஒதுக்கி நிறுத்துமாறு கூறி சுயம்புலிங்கத்திடம் கடும் வாக்குவாதம் செய்தார். தகராறு முற்றியதால் சுயம்புலிங்கம், அஞ்சுகிராமம் காவல்நிலையம் வந்து இதுகுறித்து புகார் செய்தார். போலீசார் உடனே பஸ்நிலையம் சென்று பார்த்த போது, அங்கு ஆனந்த் இல்லை. இதையடுத்து போலீசார் திரும்பி சென்றனர். இதையடுத்து பஸ் நிலைத்துக்கு சுயம்புலிங்கம் வந்த போது, அங்கிருந்த ஆனந்த் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுயம்புலிங்கத்தை  குத்தினார். அப்போது அங்கு பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள், மாணவ, மாணவிகள் இதைக்கண்டு அலறி அடித்து ஓடினர்.  கத்தியால் குத்தப்பட்ட சுயம்புலிங்கம் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனே பொதுமக்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்து மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுயம்புலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த கன்னியாகுமரி டிஎஸ்பி முத்துப்பாண்டி, இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். பஸ்நிலையத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம், வங்கி உள்ளிட்டவற்றில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. கொலை தொடர்பாக அதில் பதிவாகியுள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பஸ்நிலையத்தில் குவிந்திருந்த பயணிகள் கண் முன் மினிடெம்போ டிரைவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: