குடிநீர் ஊரணி ஆக்கிரமிப்பு வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

காளையார்கோவில், அக்.26: காளையார்கோவில் அருகே குடிநீர் ஊரணி ஆக்கிரமிக்கப்பட்டதை கண்டித்து, தாலுகா அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டனர். காளையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்டது ஆண்டிச்சியூரணி கிராமம். இக்கிராமத்தில் 600க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றார்கள். கிராம மக்களின் குடிநீர் தேவையை பள்ளிவயல் குரூப்பில் உள்ள காட்டேந்தல் சுக்கானூரணி பூர்த்தி செய்து வருகின்றது. இந்நிலையில் இவ்வூரணி மற்றும் வரத்துக் கால்வாயினை ஆண்டிச்சியூரணி கிராமத்தைச் சேர்ந்த சேவியர் என்பவர் ஆக்கிரமித்து வருவதாக அக்கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஊரணி மற்றும் வரத்துக்கால்வாயில் விவசாயப் பணியை துவங்கியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராமமக்கள் 50க்கும் மேற்பட்டோர் காளையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் வட்டாட்சியர் பாலகுரு சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர். ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சாலை மறியலில் ஈடுபடப்போவதாக மக்கள் தெரிவித்தனர்.

Related Stories: