கொரட்டூரில் இடிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று இடம் கோரி வி.சி.க.ஆர்ப்பாட்டம்

அம்பத்தூர், அக். 23: கொரட்டூர் ஏரியை ஆக்கிரமித்து கங்கை நகர், மூகாம்பிகை நகர், எஸ்.எஸ்.நகர், முத்தமிழ் நகர், பாலாஜி நகர் ஆகிய பகுதிகளில் 600க்கும் மேற்பட்ட வீடுகள்  கட்டப்பட்டு இருந்தன.  இந்த வீடுகளை நீதிமன்ற உத்தரவின் பேரில் வருவாய், பொதுப்பணித்துறை அதிகாரிகள் இணைந்து கடந்த 12ம்தேதி  இடித்தனர். இதில் 468 குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டது.  இவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மாற்று இடம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதை கண்டித்து அம்பத்தூர் தொகுதி விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் கண்டன  ஆர்ப்பாட்டம் நேற்று காலை அம்பத்தூர் உழவர் சந்தை அருகில் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி செயலாளர் இப்ராஹிம் தலைமை தாங்கினார். இதில் மாநில துணை பொதுச்செயலாளர் ஆளூர்  ஷாநவாஸ் கண்டன உரையாற்றினார்.

கூட்டத்தில் 200க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு இடிக்கப்பட்ட குடியிருப்போருக்கு மாற்று இடத்தை உடனடியாக வழங்க கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.  மாவட்ட செயலாளர் கௌரி  சங்கர், மாநில, மாவட்ட தொகுதி நிர்வாகிகள் ஆதிமொழி, கௌதம் கோபு, பேரறிவாளன், கதிர்நிலவன், சங்கர், குமார், இளையவளவன், அப்புவளவன் உள்பட பாதிக்கப்பட்டவர்களும்  கலந்து கொண்டனர்.

Related Stories: