வீட்டில் இருந்தே விண்ணப்பிக்கலாம் ஆன்லைன் மயமாகும் ஆர்டிஓ அலுவலகம் இடைத்தரகர்களுக்கு ‘ஆப்பு’

திண்டுக்கல், அக். 18: வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முறைகேடுகளைத் தவிர்க்கவும், பொதுமக்களின் நேர விரயத்தைத் தவிர்க்கவும் இணையதள திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2012 முதல் வாகனங்களுக்கான பதிவுக் கட்டணம் மற்றும் வரிகள் இணையதளம் மூலம் செலுத்தப்பட்டு வருகின்றன. தொடர்ந்து பெயர் மாற்றம், உரிமம் மாற்றம் செய்தல், தவணைக்கொள்முதல், தவணை ரத்து உள்ளிட்ட பல்வேறு பணிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்டணமும் கணினி மூலமே செலுத்த வேண்டும்.

இந்நிலையில் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பகுதி அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பணிகளும் இணையதள மயமாக்கப்பட்டுள்ளன. இதற்காக சாரதி எனும் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதற்கான கட்டணத்தை மட்டும் நேரடியாக செலுத்தி வந்தனர். இந்நிலையில் மேலும் பல வசதிகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. ஓட்டுநர் உரிமம் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகள் அதாவது பழகுநர் உரிமம், நிரந்தர ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் முகவரி மாற்றம் செய்தல், நகல் ஓட்டுநர் உரிமம் பெறுதல் போன்றவற்றிற்கான கட்டணத்தை தங்கள் இருப்பிடத்தில் இருந்தே இணையம் மூலம் செலுத்திக் கொள்ளலாம். இணையதளத்தில் விண்ணப்பித்து தொகையையும் ஆன்லைன் மூலமே செலுத்தலாம்.

வங்கி, டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் பணத்தை செலுத்தலாம். இதற்கான ஒப்புகைச்சீட்டை சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் கொடுத்து உரிய ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இதுகுறித்து கலெக்டர் வினய் கூறுகையில், ‘மனுதாரர்கள் அலுவலகத்திற்கு வந்து பணம் செலுத்துவதால் காலவிரயம், காத்திருப்பு உள்ளிட்டவை குறைகிறது. இருப்பிடத்தில் இருந்தே விண்ணப்பிப்பதால் 24 மணி நேரமும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.அலுவலகப் பணியாளர்களுக்கும் பணிச்சுமை குறைந்து இதரப் பணிகளில் கவனம் செலுத்த முடியும். போக்குவரத்துத் துறையின் படிப்படியான முன்னேற்றத்தில் இது ஒரு மைல்கல் ஆகும். இதேபோல் வட்டார போக்குவரத்து அலுவலகப் பணிகள் அனைத்துமே ரொக்கமில்லா பரிவர்த்தனைகளாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது’ என்றார். இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் இடைத்தரகர்களின் தாக்கம் குறைந்து பொதுமக்கள் அதிகாரிகளுக்கு நேரடித் தொடர்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

Related Stories: