பொது விநியோக திட்டத்துக்கு தனித்துறை கேட்டு நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை, அக். 16: பொது விநியோக திட்டத்துக்கு தனித்துறையை அமைக்க வேண்டும் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சை தலைமை தபால் நிலையம் முன் தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் ராமலிங்கம், மாநில இணை செயலாளர் ராமலிங்கம், வருவாய்த்துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தருமகருணாநிதி, துணை செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை மாநில தலைவர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். பொது விநியோக திட்டத்துக்கு தனித்துறை அமைக்க வேண்டும். கூட்டுறவுத்துறை நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு நுகர்பொருள் வாணிபக்கழக பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அத்யாவசிய பொருட்கள் அனைத்தையும் பொட்டலமாக வழங்க வேண்டும். நியாயவிலை கடைகளில் பணியாளர்களின் முன்பு பொருட்கள் அனைத்தையும் எடையிட்டு வழங்க வேண்டும்.

பொது விநியோக திட்ட பணிகள் முழுவதும் பயோமெட்ரிக், டிஜிட்டல் ரேஷன் கார்டு வழங்குதல் உள்ளிட்டு பயோமெட்ரிக் மின்னணு குடும்ப அட்டை வழங்குதல் உள்ளிட்ட அனைத்தையும் 100 சதவீதம் கணினி மயமாக்க வேண்டும். பணியாளர்களை எவ்வித நிபந்தனையின்றி பணிவரன் செய்ய வேண்டும். நியாய விலைக்கடை பணியாளர்கள் அவர்கள் வாங்கும் கடைசி மாத ஊதியத்தில் சரிபாதியை ஓய்வூதியமாக வழங்க வேண்டும். கட்டுப்பாடற்ற பொருட்களை விற்பனை செய்ய நிர்ப்பந்தம் செய்ய கூடாது. 500 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள கடைகளுக்கு எடையாளர் நியமிக்க வேண்டும். பழுதடைந்த சாக்குகளுக்கு பணியாளர்களிடம் பணம் வசூல் செய்வதை கைவிட வேண்டும்.

பணியாளர் மருத்துவ காப்பீடு திட்டத்தை விரிவுபடுத்தி அனைத்து மருத்துவ செலவினங்களும் பொருந்தும்படி செய்ய வேண்டும். நியாயவிலை கடை பணியாளர்களின் லாரி வாடகை, ஏற்று கூலி, இறக்கு கூலி, மின் கட்டணம் ஆகியவற்றை வசூல் செய்யக்கூடாது. அரசு பணியாளர்களுக்கு வழங்குவதுபோல் மாதம்தோறும் மருத்துவப்படியை ரூ.300 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Related Stories: