ஆளுங்கட்சியினர், அதிகாரிகள் துணையோடு அத்துமீறி நுழையும் வெளிமாவட்ட மீனவர்கள்

ராமநாதபுரம், அக்.16: ஆளுங்கட்சியினர், அதிகாரிகளின் துணையோடு வெளிமாவட்ட மீனவர்கள், ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் மீன்பிடிப்பதாக, மீனவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். கலெக்டர் வீரராகவராவிடம் மனு அளித்தனர். மனுவில், ‘‘ராமநாதபுரம்  மாவட்டத்தில் கடலாடி அருகே கீழமுந்தல், மேலமுந்தல் பகுதி கடற்கரையோரங்களில் நாட்டுப்படகு மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர். நாட்டு படகின் மூலம் மீன்பிடி தொழில் செய்துவரும் நிலையில் கடந்த ஆண்டு வெளிமாவட்டங்களிலிருந்து   100க்கும் மேற்பட்ட மோட்டார்  பைபர் படகுகளை கொண்டு மீனவர்கள் மீன்பிடித்தனர். இதனால் வெளிமாவட்ட மீனவர்களுக்கும், ராமநாதபுரம் மாவட்ட உள்ளூர் மீனவர்களுக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட்டன. இதே போல இந்த ஆண்டும் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலாடி அருகே கீழமுந்தல்,

மேலமுந்தல் பகுதி கடற்கரையோரங்களில் பைபர் படகுகளை கொண்டு வந்து வைத்துள்ளனர். இவற்றில் பெரும்பாலான படகுகளுக்கு ராமநாதபுரத்திலும், தூத்துக்குடியிலும், கன்னியாகுமரியிலும் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு படகுக்கு ஒரு இடத்தில் மட்டும் தான் மீன்பிடிக்க உரிமம் வழங்கப்பட வேண்டும். சில படகு உரிமையாளர்களுக்கு சாதமாக   3 மாவட்ட கடற்கரைகளில் மீன்பிடிக்க மீன்வளத்துறை அதிகாரிகள் உரிமம் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மீன்வளத்துறை அதிகாரிகளின் துணையோடு தான் ராமாநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடிக்க வெளிமாவட்ட மீனவர்கள் முன்வந்திருக்கின்றனர். இவர்களுக்கு ஆளும் கட்சியினரும் ஆதரவாக இருப்பதாக தெரிகிறது.

வெளிமாவட்ட மீனவர்கள் ராமநாதபுரத்தில் மீன் பிடித்தால் பாரம்பரிய முறையில் மீன்பிடித்து வரும் நாட்டுப்படகுகளின் மீன்பிடி வலைகளை சேதப்படுத்தி விடுகிறார்கள். இதனால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலைகள் அதிகமாக உள்ளது. எனவே வெளிமாவட்ட மீனவர்களை ராமநாதபுரத்தில் மீன்பிடிக்க அனுமதி அளிக்கக்கூடாது’’ என தெரிவித்துள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் வீரராகவராவ், ‘‘எக்காரணத்தை முன்னிட்டும் வெளிமாவட்ட மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க மாட்டோம். மீன்வளத்துறை அதிகாரிகள் வெளிமாவட்ட மீனவர்கள் வருகையை கண்காணித்து தடுக்க வேண்டும்’’ அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

Related Stories: