‘போட்ட ஒரு ஆண்டிலே ேபாச்சு’ கொடைக்கானல் பாம்பார்புரம் சாலை படுமோசம் சுற்றுலா பயணிகள் கடும் அவதி

கொடைக்கானல், அக். 16: கொடைக்கானல் பாம்பார்புரம் சாலை அமைத்த 1 ஆண்டிலே குண்டும், குழியுமாக மாறிவிட்டதால் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு ஆண்டின் அநேக மாதங்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை இருக்கும். இதுதவிர பள்ளி விடுமுறை காலங்கள் மற்றும் வார விடுமுறை நாட்களிலும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை புரிவர்.

கொடைக்கானலின் முக்கிய சுற்றுலா தலங்களான பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை, மோயர் பாயிண்ட், பைன் பாரஸ்ட், அப்பர் லேக் வியூவுக்கு செல்வதற்கு பாம்பார்புரம் சாலையே பிரதான சாலையாக உள்ளது. இதனால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் சென்று வருகின்றன. நெடுஞ்சாலைத்துறைக்கு கட்டுப்பாட்டில் உள்ள இச்சாலை கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு தான் புதுப்பிக்கப்பட்டது. ஆனால் சில மாதங்களிலே தரமற்ற பணி காரணமாக சாலை குண்டும், குழியுமாக மாறி விட்டது.

தற்போது தொடர்மழையால் இச்சாலை மேலும் மோசமாகி போக்குவரத்திற்கு முற்றிலும் லாயக்கற்றதாகி விட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறையிடம் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் இதுவரை சாலையில் சிறு சீரமைப்பு பணி கூட செய்யாமல் உள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த தென்னவன் கூறுகையில், ‘‘சுற்றுலா தலங்கள் மட்டுமின்றி இந்த சாலை பகுதியில் பல பள்ளிகள் உள்ளன. இதனால் மாணவ, மாணவியரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சாலையை சீரமைக்க கோரி நாங்களும் பல மாதங்களாக போராடி வருகிறோம். ஆனால் நெடுஞ்சாலைத்துறையோ கண்டுகொள்ளாமல் உள்ளது. எனவே காணாமல் போன பாம்பார்புரம் சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களை திரட்டி பெரியளவில் போராட்டம் நடத்துவோம்’’ என்றார்.

Related Stories: