பெண்கள் சிறைகளில் சானிடரி நாப்கின்கள் தயாரிப்பு முடக்கம்மூலப்பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் அதிகாரிகள் தகவல்

வேலூர், அக்.16: தமிழக பெண்கள் சிறையில் சானிடரி நாப்கின் தயாரிப்பு மூலப்பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அதனை தயாரிக்கும் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகள் குற்றவாளிகளை தண்டிக்கும் தண்டனை கூடமாக மட்டும் அல்லாமல், அவர்களை சமூகத்துக்கு ஏற்றவர்களாக மாற்றும் பணியையும் செய்து வருகின்றன. வேலூரில் ஆண்கள் சிறையில் விவசாயம், காவல் துறைக்கு தேவையான புட்வேர், உணவு பொருட்கள் ஆகியவை தயாரிக்கப்படுகிறது. இதேபோல், பெண்கள் சிறையில் புடவை ஜரிகை, கைவினை பொருட்கள், அரிசி வற்றல், மிளகாய் வற்றல், ஜவ்வரிசி வற்றல், ஊறுகாய் உள்ளிட்ட உணவு பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. பெண்கள் சிறையில் நன்னடத்தை கைதிகளான சுமார் 12 பேரை கொண்டு நாப்கின்கள் நவீன இயந்திரத்தின் மூலம் கடந்த 2014ம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்டு வந்தது. இங்கு தயாரிக்கப்படும் நாப்கின்கள் அரசு பள்ளிகளில் மாணவிகளின் தேவைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்காக பள்ளிகளிலேயே ஏடிஎம் இயந்திரத்தைபோல நாப்கின்களை எடுக்கும் இயந்திரம் அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. வேலூர் பெண்கள் சிறையில் இதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து சென்னை புழல், திருச்சி சிறையில் நாப்கின் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்கிடையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்தப்பட்டது. இதில் நாப்கினுக்கு 12 சதவீத வரி விதிக்கப்பட்டது.

மேலும் நாப்கின் தயாரிப்புக்கு தேவைப்படும் மூலப்பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதால் அவை கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் நஷ்டத்தை தவிர்க்க தமிழகத்தில் வேலூர், புழல், திருச்சி சிறைகளில் 10 மாதங்களுக்கு மேலாக நாப்கின் தயாரிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாப்கின் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் குறைந்த விலையில் வழங்க தனியார் நிறுவனம் முன்வந்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு பெண்களுக்கு நாப்கின் வழங்குவதற்கு முதற்கட்டமாக 91 ஆயிரத்து 400 நாப்கின்களுக்கான ஆர்டர்கள் கடந்த மே மாதம் கிடைத்தது. ஆர்டர்கள் கிடைத்து 5 மாதத்திற்கு மேலாகியும் நாப்கின் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பெண்கள் சிறைகளில் நாப்கின் தயாரிக்கும் பணிகள் ஓராண்டுக்கு மேலாக நிறுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: