100 நாள் வேலையில் முழுமையான சம்பளம் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் வலியுறுத்தல்

குஜிலியம்பாறை, செப். 26:  நூறு நாள் வேலை திட்டத்தின் அரசு நிர்ணயித்த முழுமையான சம்பளம் வழங்க கோரி குஜிலியம்பாறையில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமை வகிக்க, மாவட்ட செயலாளர் அருட்செல்வன், ஒன்றிய தலைவர் தங்கவேல் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் அரசு நிர்ணயித்த தினக்கூலி ரூ.224 முழுமையாக வழங்க வேண்டும். இயந்திரங்கள் பயன்பாட்டை தடுக்க வேண்டும். சம்பள நிலுவை தொகை உடனடியாக வழங்க வேண்டும். பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து கோரிக்கை மனுவை அலுவலகத்தில் கொடுத்தனர். இதில் ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணி, ஒன்றிய செயலாளர் சரவணன், விவசாய சங்க நிர்வாகிகள் தங்கவேல், ஜெயபால், காளிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: