அரசு குளம் தனிநபருக்கு பட்டா குஜிலியம்பாறை விஏஓ அலுவலகம் முற்றுகை கிராமமக்கள் ஆவேசம்

குஜிலியம்பாறை, செப். 26:  அரசு குளம் தனிநபருக்கு பட்டா மாறுதல் செய்ததை கண்டித்து  குஜிலியம்பாறை விஏஓ அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். குஜிலியம்பாறை ஒன்றியம் ஆர்.கோம்பை சின்னழகுநாயக்கனூர் அரசுக்கு சொந்தமான மேட்டுமடைக்குளம் உள்ளது. சுமார் 4 ஏக்கர் பரப்பளவு உள்ள இக்குளத்தில் பல வகையான மரங்கள் உள்ளது. மழைக்காலங்களில் இங்குள்ள புலியுத்து, பட்டலுத்து வறட்டாறுகளில் வரும் தண்ணீர் முழுவதும் இக்குளத்தில் தேங்கும். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனிநபர் ஒருவர், இக்குளத்தில் உள்ள மரங்களை வெட்ட முயன்றார். இதையறிந்த கிராமத்தினர் திரண்டு வந்து மரங்களை வெட்ட விடாமல் தடுத்தனர். அப்போது பட்டா இடத்தில் உள்ள மரங்களை வெட்டுவதாக கிராமமக்களிடம் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து கிராமமக்கள் வருவாய்த்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இக்கிராமக்கள் நேற்று குஜிலியம்பாறையில் உள்ள விஏஓ அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அரசுக்கு சொந்தமான குளத்தை தனிநபருக்கு பட்டா மாறுதல் செய்ததை கண்டித்தும், அதனை ரத்து செய்யவும், மரங்களை வெட்டாமல் தடுக்கவும் கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து புகார் மனுவை பாளையம் வருவாய் ஆய்வாளரிடம் கொடுக்க சென்றனர். ஆனால் அவர் இல்லை. இதையடுத்து கோட்டாநத்தம் வருவாய் ஆய்வாளர் மைதிலியிடம் மனுவை கொடுத்தனர். மனுவை பெற்ற அவர், இதுகுறித்து வேடசந்தூர் தாசில்தார் கவனத்திற்கு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். அதன்பின்பே கலைந்து சென்றனர்.

Related Stories: