கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ள அனுமதி கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

திருச்சி,செப்.25: கொள்ளிடம்  ஆற்றில் மணல் அள்ள அனுமதி கோரி மாட்டு வண்டி தொழி லாளர்கள் காத்திருப்பு  போராட்டத்தில் ஈடுபட்டதால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது. கொள்ளிடம்  ஆற்றில் மாட்டு வண்டி வைத்து மணல் அள்ள முறையான அனுமதி வழங்க  வேண்டும்.பாரம்பரியமாக மணல் அள்ளி பிழைப்பு நடத்தி வரும் ஆயிரக்கணக்கான  தொழி லாளர்களின் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும். கட்டிட தொழிலை முடக்கக்  கூடாது. வறுமையில் வாடும் மாட்டு வண்டி தொழிலாளர்களையும் பாதுகாக்க  நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள்  சங்கம் (சிஐடியு) சார்பில் திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள தலைமை  பொதுப்பணித்துறை அலுவலகத்தில் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம்  நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, மாவட்ட செயலாளர் சேகர்  தலைமையில், மாவட்ட பொருளாளர் மணிகண் டன் முன்னிலையில், மாவட்டத் தலைவர்  ராமர், சிஐடியு மாவட்ட தலைவர் ரெங்கராஜன் மற்றும் மாட்டு வண்டி  தொழிலாளர்கள் சங்க கொடியுடன் குடும்பத்துடன் வந்து பொதுப் பணித்துறை தலைமை  பொறியாளர் அலுவலகம் முன் நேற்று காலை 11 மணி முதல் காத்திருப்பு  போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில்  பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராமமூர்த்தி தலைமையில் நடந்த கூட்டத்தில்  துணை செயற்பொறியாளர் ராஜா, போலீஸ் உதவி கமிஷனர் சிகாமணி, இன்ஸ் பெக்டர்  வேல்முருகன் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில்,  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லுார் தாலுகா மாதவபெருமாள் கோயில் மணல்  குவாரியில் அரசு அனுமதிக்கப்பட்ட எல்லைக்குள் மணல் எடுப்பது என  தீர்மானிக்கப்பட்டு இதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொண்டு ஒரு வார  காலத்திற்குள் குவாரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி  மாவட்டம் லால்குடி தாலுகா அரியூர் மணல் குவாரியில் ஒரு வார காலத்திற்குள்  மணல் அள்ளுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி ஆற்றில் பாசனத்திற்கு  தண்ணீர் செல்வதால் காவிரி ஆற்றில் 4 மாத காலத்திற்கு அனுமதி பெறப்பட்ட  குவாரிகளில் மணல் அள்ள இயலாது.

புதிய மணல் குவாரிகள் தொடங்க தண்ணீர்  பாசனத்திற்கு நின்றவுடன் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவுகள்  எடுக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அனைவரும்  கலைந்து சென்றனர்.

Related Stories: