கணவருடன் சேர்த்து வைக்க கோரிய பெண் போலீஸ் ஸ்டேஷனில் மயக்கம் மருத்துவமனையில் அனுமதி

சத்தியமங்கலம்,  செப். 25:  சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி அத்தியூர்  புதூரை சேர்ந்த விவசாயி பழனிச்சாமி என்பவரது மகன் மூர்த்தி (27). இவர்  சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் வேலைசெய்து  வந்தார். அப்போது உடன் வேலை செய்த தூத்துக்குடியை சேர்ந்த மீனா என்ற  பெண்ணுடன் காதல் ஏற்பட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டிற்கு  தெரியாமல் பண்ணாரியில் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் கோவை உக்கடத்தில்  உள்ள நண்பனின் வீட்டில் ஒரு மாதம் தங்கியுள்ளனர். பின்னர் மூர்த்தி  மீனாவிடம் ஊருக்கு சென்று வருவதாக கூறி சென்றுவிட்டு திரும்பி வரவில்லை. கணவன் வராததால் சந்தேகமடைந்த மீனா விசாரித்தபோது கடந்த சில தினங்களுக்கு  முன்பு மூர்த்தி அட்டணை மேலூர் கிராமத்தை சேர்ந்த வேறொரு பெண்ணை திருமணம்  செய்து கொண்டதாக தகவல் கிடைத்ததால், நேற்று மீனா கடம்பூர்  காவல்நிலையத்திற்கு சென்று தன்னுடைய கணவன் மூர்த்தியுடன் சேர்த்து  வைக்குமாறு கூறியுள்ளார். போலீசார் மூர்த்தி மற்றும் அவரது பெற்றோரை  அழைத்து விசாரித்தபோது அவர்கள் முரண்டு பிடித்ததால், அவர்களுடன்  வாய்த்தகராறில் ஈடுபட்ட மீனா மயங்கி விழுந்தார். இதையடுத்து போலீசார்  மீனாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். இதுகுறித்து கடம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: