ஈரோடு அருகே விசைத்தறி குடோனில் பதுக்கிய 23 மூட்டை குட்கா பறிமுதல்

ஈரோடு, செப். 21: ஈரோடு அருகே வீரப்பன்சத்திரம்  பகுதியைச் சேர்ந்தவர் கமலஹாசன். இவர் இந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக  மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணிக்கு தகவல் கிடைத்தது.  இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட கடை மற்றும் கமலஹாசனின் வீடுகளில் புகையிலை பொருட்கள் தொடர்பாக சோதனை நடத்தினர். ஆனால் எந்த பொருளும் சிக்கவில்லை. தொடர்ந்து அதிகாரிகள் அவரை கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று மீண்டும் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலருக்கு கிடைத்த தகவலின்படி, வீரப்பன்சத்திரம் சி.என்.கல்லூரி எதிரே, கொத்துக்காரர் தோட்டம் என்ற இடத்தில் உள்ள விசைத்தறி கூடத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்துள்ளதாக தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி, உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வன் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் உடனடியாக சம்பந்தப்பட்ட விசைத்தறி கூடத்திற்கு சென்றனர். அங்கிருந்த அறையை திறந்து பார்த்தபோது அதில் 23 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ரூ.2.25 லட்சம் மதிப்பீலான 220 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 

இதுகுறித்து அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், கமல் டிரேடர்ஸ் என்ற பெயரில் மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்த கமலஹாசன், அதிகாரிகள் வருவதை அறிந்து விசைத்தறி கூடத்தில் பதுக்கி வைத்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த கடையின் உரிமத்தை ரத்து செய்யவும் உத்தரவிடப்பட்டது.

Related Stories: