ஜிபிஎஸ் கருவி காட்டிக் கொடுத்ததுஆம்புலன்ஸ் டிரைவர் சிக்கினார்

குன்னூர்,செப்.21: சென்னை எக்மோர் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஆம்புலன்ஸ்ஒன்றுநோயாளியை ஏற்றிக் கொண்டு நேற்று முன்தினம் கோவை வந்தது. எக்மோரை சேர்ந்த டிரைவர் சந்தோஷ் ஆம்புலன்சை ஓட்டி வந்தார்.  கோவையில் நோயாளியை இறக்கிவிட்ட சந்தோஷ், ஆம்புலன்சை சென்னைக்கு கொண்டு செல்லாமல், ஊட்டிக்கு சென்றுவிட்டார். இதனை ஜிபிஎஸ் கருவி மூலம் அறிந்த தனியார் நிறுவனம், டிரைவர் சந்தோசை செல்போனில் தொடர்பு கொண்டது. ஆனால் அவர் செல்போனை எடுக்கவில்லை.

 இதுகுறித்து அந்த நிறுவன மேலாளர் சீனிவாசன் சென்னை போலீசில்  புகார் தெரிவித்தார். சென்னை போலீசார் குன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை, குன்னூர் லெவல் கிராசிங் அருகே சென்று கொண்டிருந்த ஆம்புலன்சை குன்னூர் டிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி நிறுத்தி டிரைவர் சந்தோசிடம் விசாரணை  நடத்தினார்.  இதில், சந்தோஷ் ஆம்புலன்சை சென்னை கொண்டு செல்லாமல், ஊட்டியை சுற்றிப்பார்க்க வந்ததாகவும், விரைவில் திரும்பி விடலாம் என நினைத்து செல்போன் அழைப்பை  எடுக்காமல் தவிர்த்ததாகவும்கூறினார். இதையடுத்து அவர் எச்சரித்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Related Stories: