கலப்பட டீ தூள் தயாரித்த குடோனுக்கு சீல்

இடைப்பாடி, செப். 21: இடைப்பாடி அருகே கலப்பட டீ தூள் தயாரித்த குடோனுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்து, 988 கிலோ டீ தூளை பறிமுதல் செய்தனர். சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பனுக்கு இடைப்பாடி தாலுகா பகுதியில் உள்ள மளிகை கடைகளில் கலப்பட டீ தூள் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தது. அதனடிப்படையில் நேற்று காலை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன் தலைமையில் பனமரத்துப்பட்டி உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கோவிந்தராஜ், வாழப்பாடி ஒன்றிய உணவு பாதுகாப்புஅலுவலர் சுருளி மற்றும் அதிகாரிகள் காலை இடைப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வீரப்பம்பாளையம் பகுதியில் உள்ள டீ கடைகளில் கலப்படம் செய்த டீ தூளை பயன்படுத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து அந்த டீ தூள் எங்கிருந்து கிடைக்கிறது யாரால் விற்பனை செய்யப்படுகிறது என அதிகாரிகள் கேட்டறிந்தனர்.

கிடைத்த தகவலின் பேரில் வெள்ளாண்டி வலசையில் உள்ள தியேட்டர் பகுதியில் வசித்து வரும் அழகர், (45) என்பவருக்கு சொந்தமான டீ தூள் குடோனில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு, காலாவதியான டீ தூளை கலப்படம் செய்து டீ தூள் தயார் செய்யப்படுவது தெரிந்தது.

இதையடுத்து குடோனில் இருந்த லேபிள்கள், மற்றும் 988 கிலோ கலப்பட டீ தூளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதுகுறித்து அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் இடைப்பாடி போலீசார் 4 பிரிவின் கீழ் அழகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து இடைப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Related Stories: