பாம்பனில் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையால் பிடிக்கப்பட்ட மீன்களை கடலில் கொட்டிய அதிகாரிகள்

ராமேஸ்வரம், செப். 21: பாம்பனில் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையால் பிடித்து வரப்பட்ட மீன்களை சக மீனவர்கள் மீன் இறங்கு தளத்தில் இறக்க விடாமல் தடுத்ததால் மீனவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது. மீன்களை கைப்பற்றிய மீன்துறை அதிகாரிகள் வியாபாரிகள் இல்லாததால் கடலில் கொட்டிச் சென்றனர். பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடலில் இரட்டைமடி வலையினால் மீன்பிடிப்பதற்கு அரசு தடை உள்ளது. இவ்வகை வலையால் கடலில் மீன்பிடிப்பதால் கடல் வளம் அழிவதுடன் மீன்வளமும் அழிந்து வருகிறது. ஆனால் அரசு தடையையும் மீறி நூற்றுக்கணக்கான படகுகள் இரட்டைமடி மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருவதால் இதனைத் தடுக்க மீனவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை பாம்பன் கடலில் இரட்டைமடி மீன்பிடிப்பில் மீன்பிடித்த மீனவர் ஒருவரின் விசைப்படகில் பிடிக்கப்பட்ட மீன்களை நடுக்கடலில் நாட்டுப்படகில் ஏற்றிக்கொண்டு விற்பனை செய்வதற்காக பாம்பன் தெற்குவாடி கடற்கரை பகுதிக்கு வந்தனர். கடற்கரையில் அமைந்துள்ள மீன் இறங்குதளத்தில் படகில் இருந்த மீன்களை இறக்க முயன்றபோது அங்கிருந்த மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலையினால் பிடிக்கப்பட்ட மீன் என்பதால் தடுத்து நிறுத்தினர். இதனால் இரதரப்பு மீனவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே மீன்துறை அதிகாரிகள் மற்றும் மரைன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பாம்பன் பகுதி மீன்துறை உதவி ஆய்வாளர் ஈஸ்வரி, மேற்பார்வையாளர் அலெக்ஸ் இருவரும் கடற்கரைக்கு சென்று நாட்டுப்படகில் இறங்குதளத்தில் இறக்கப்பட்ட மீன்களை பறிமுதல் செய்தனர்.

பாதிக்கப்பட்ட மீனவர்கள் மீன்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. தகவல் கிடைத்த பாம்பன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மேலும் பிரச்னை ஏற்படாமல் தடுத்து மீனவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மீன்களை ஏலம் எடுப்பதற்கு வியாபாரிகள் யாரும் முன்வராததால் பறிமுதல் செய்யப்பட்ட மீன்கள் கடலில் கொட்டப்பட்டது. அந்த மீன்களை மீனவர்கள் மீண்டும் அள்ளினர். தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையினால் மீன்பிடித்தது, உயர் அதிகாரிகளுக்கு புகார் செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மரைன் மற்றும் பாம்பன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: